தெலுங்கானாவில் சந்திரசேகர ராவுக்கு பின்னடைவு; 12 முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைந்தனர்


தெலுங்கானாவில் சந்திரசேகர ராவுக்கு பின்னடைவு; 12 முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைந்தனர்
x

தெலுங்கானாவில் ஆளும் கட்சியை சேர்ந்த 12 முன்னாள் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைந்ததில் சந்திரசேகர ராவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி, வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு மாற்றாக தனது கட்சியை உருவாக்கும் முனைப்பில் உள்ளது. இதற்காக மாநில அளவிலான அந்தஸ்தில் இருந்த அக்கட்சி தேசிய கட்சியாக மாறுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து சமீபத்தில் அங்கீகாரம் பெற்றது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. இந்த தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. முனைப்புடன் செயல்பட தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அந்த கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

அக்கட்சிக்கு எதிராக மாற்று அணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இதற்காக, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த 23-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

எனினும், இந்த கூட்டத்திற்கு சந்திரசேகர ராவ் செல்லவில்லை. பா.ஜ.க.வுக்கு எதிரான போரானது நாட்டில் முதன்மையான விவகாரங்களை பற்றி இருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசத்தில் இந்த திட்டம் அதில் இல்லை. யாரோ ஒருவரை நீக்கிவிட்டு அல்லது சிலரை அந்த இடத்தில் அமர வைப்பது என்பதில் நாம் ஆர்வமுடனும் மற்றும் வருத்தத்துடனும் இருப்பது போல் தோன்றுகிறது. அது நிகழ்ச்சி நிரலாக இருக்க கூடாது என கூட்டத்தில் பங்கேற்காததற்கு நியாயம் கூறும் வகையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.

பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாதபோதும், மாற்று சக்தியாக தனது கட்சியை வெற்றி பெற செய்யும் நோக்கில் அவர் உள்ளார். இந்த நிலையில், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அக்கட்சியை சேர்ந்த 12 முன்னாள் மந்திரிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உடனிருந்தனர். நடப்பு ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அக்கட்சியை சேர்ந்தவர்களின் இந்த செயலால், சந்திரசேகர ராவ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும்போது, வேறு சிலரும் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கும்போது, அது தேர்தல் வெற்றியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.


Next Story