உத்தரகாண்ட்டில் தொடர்மழை: பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு: பயணிகள் சிக்கித் தவிப்பு
உத்தரகாண்ட்டில் தொடர்மழை காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் கடந்த சில நாட்களக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முக்கிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வெறியேற முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாமோலி மாவட்டத்தில் இடைவிடாத மழை பெய்து வருவதால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை (NH-7) கடந்த 13 மணி நேரமாக லம்பகாட் பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து சாலைகளில் தேங்கி நிற்கும் குப்பைகள் காரணமாக வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். நெடுஞ்சாலையை திறக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதனிடையே டேராடூன், நைனிடால், பித்தோராகர், பாகேஷ்வர், தெஹ்ரி, பவுரி மற்றும் சாமோலி ஆகிய இடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் பதற்றமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில், சுற்றுலா பயணிகள் உள்பட 200 பேர் சிக்கி இருந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியோகி உள்ளது.