மைசூரு தசரா விழாவில் தங்க அம்பாரியை சுமந்த 'பலராமா' யானை உயிரிழப்பு: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்


மைசூரு தசரா விழாவில் தங்க அம்பாரியை சுமந்த பலராமா யானை உயிரிழப்பு: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
x

துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் பலராமா யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழாவில் நடைபெறும் ஜம்பு சவாரி என்ற யானை சவாரி பிரசித்தி பெற்றது.

இதில், சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை 13 முறை சுமந்த பெருமை பெற்றது, 'பலராமா' என்ற யானை ஆகும்.

மிக நீண்ட தந்தங்களுடன் கம்பீரமாகவும், சாந்தமாகவும் காட்சி அளித்த பலராமா யானைக்கு 67 வயதான நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்டது. மேலும் வாயில் ஏற்பட்ட புண்ணால் உணவு உண்ண முடியாமல் தவித்து வந்தது.

அதற்கு கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பலராமா யானை நேற்று முன்தினம் இறந்தது.

நேற்று பீமனகட்டே வனப்பகுதியில் அந்த யானைக்கு இறுதிச்சடங்கு நடந்தது. மைசூரு மன்னர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அர்ச்சகர் பூஜை செய்தார்.

பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் பலராமா யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பலராமா யானை உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். தசரா ஊர்வலத்தில் தங்க அம்பாரியை அந்த யானை சுமந்துசெல்லும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story