பெங்களூரு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படும்; மந்திரி அசோக் பேச்சு
பெங்களூரு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று மந்திரி அசோக் கூறினார்.
பெங்களூரு:
பெங்களூரு திருவிழா
பெங்களூரு கப்பன் பூங்காவில் நம்ம பெங்களூரு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. முன்னதாக பெங்களூரு திருவிழாவை வருவாய்த்துறை மந்திரி அசோக் தொடங்கி வைத்து பேசியதாவது:-
நம்ம பெங்களூரு திருவிழாவை தொடங்கி வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கெம்பேகவுடாவில் பெங்களூரு உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது பெங்களூரு உலகஅளவில் தனிச்சிறப்பு மிக்க நகரமாக மாறி இருக்கிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆண்டுதோறும் கொண்டாட முடிவு
அவ்வாறு வந்தவர்கள், அவர்களது ஊர்களில் உள்ள திருவிழாக்களை கொண்டாடி வருகிறார்கள். ஆனாலும் நம்ம பெங்களூரு திருவிழாவை கடந்த 2019-ம் ஆண்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அப்போது மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறவில்லை.
பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது பெங்களூரு திருவிழாவை கொண்டாட முதல்-மந்திரி பசரவாஜ் பொம்மை அனுமதி வழங்கி இருக்கிறார். 2 நாட்கள் நடைபெறும் திருவிழாவால் விதானசவுதா வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. மக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து பெங்களூரு திருவிழாவில் பங்கேற்க வேண்டும். இந்த பெங்களூரு திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.