பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரிக்கு, பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
பெங்களூருவில் விபத்துகளை தடுத்து மக்கள் உயிரை காக்க சாலை பள்ளங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ் சிங்குக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் விபத்துகளை தடுத்து மக்கள் உயிரை காக்க சாலை பள்ளங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ் சிங்குக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாலை பள்ளங்களால் உயிர்கள் பலி
பெங்களூருவில் பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். சாலை பள்ளங்களை மூடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், நகரில் பெய்யும் மழை காரணமாக சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. சாலை பள்ளங்களை மூடும் விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகளை, கர்நாடக ஐகோர்ட்டும் பலமுறை எச்சரித்து விட்டது. ஆனால் சாலை பள்ளங்களை முழுமையாக மூட முடியவில்லை.
சாலை பள்ளங்களால் பெங்களூருவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வாட்டாள் நாகராஜ் ரோட்டில் ஒரு பெண் பலியாகி இருந்தார். அதன்பிறகு, 15 நாட்களுக்குள் சாலை பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, இரவு-பகலாக சாலை பள்ளங்கள் மூடும் பணிகள் நடைபெற்றது.
பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
தீபாவளி பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் சாலை பள்ளங்களை மூடும் பணிகள் நிதானமாக நடைபெற்றது. பெங்களூருவில் தற்போதும் ஆயிரக்கணக்கான சாலை பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. சாலை பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால், அரசுக்கு எதிராக வாகன ஓட்டிகள் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்பட்டு உயிர்ப்பலியாவதால், பெங்களூருவில் உள்ள சாலை பள்ளங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ் சிங்குக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சாலை பள்ளங்களை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டாலோ, இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாக அதிகாரி ராகேஷ் சிங்கை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல், சாலை பள்ளங்களை மூடும் விவகாரத்தில் அலட்சியமாக இருக்கும் பிற அதிகாரிகள், என்ஜினீயர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரித்திருக்கிறார்.