சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

முன்னேறிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

உடுப்பி:

முன்னேறிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

மீன்பிடி படகுகள்

உடுப்பி மாவட்ட பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று உடுப்பியில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

மீனவர்கள் மண்எண்ணையை கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுடன் பேசி அவற்றை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் நலனுக்காக கடலோர பகுதியில் 8 மீனவ துறைமுகங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 100 அதிவேக மீன்படி படகுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள் பெருகும்

இதில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் இந்த படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மங்களூரு, கார்வார் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்களின் மேம்பாட்டிற்கு ரூ.1,774 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் கடலோர பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் பெருகும்.

முதலீடுகள் வரும்

கடலோர மாவட்டங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு முதலீடுகள் வரும். கர்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசு(மத்திய-மாநில பா.ஜனதா அரசுகள்) நடக்கிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

முன்னேறிய சமூகங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story