கர்நாடகத்தில் காங்கிரஸ் 50 ஆண்டுகள் ஊழலில் மூழ்கி இருந்தது; பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகள் ஊழலில் மூழ்கி இருந்தது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
உடுப்பி:
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகள் ஊழலில் மூழ்கி இருந்தது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடுப்பியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மக்கள் நிராகரித்தனர்
சித்தராமையா கர்நாடகத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்த ஆட்சியின் முடிவில் மீண்டும் காங்கிரசே வெற்றி பெறும் என்று அவர் கூறினார். எடியூரப்பா, குமாரசாமி மீண்டும் முதல்-மந்திரி ஆக முடியாது என்று சித்தராமையா கூறினார். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பவ்வேறு திட்டங்களை செயல்படுத்திய போதும் சித்தராமையாவையும், காங்கிரஸ் கட்சியையும் மக்கள் நிராகரித்தனர். பிரித்தாளும் கொள்கை, சமூகத்தை உடைக்க முயற்சி செய்தது, கர்நாடகத்தை மோசமான நிலைக்கு தள்ளியது போன்றவற்றை கர்நாடக மக்கள் இன்னும் மறக்கவில்லை. சித்தராமையாவின் விமர்சனத்தை பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை.
அதிகளவில் முதலீடுகள்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரஜன் எரிபொருள், அம்மோனியா போன்றவை கடலோர பகுதிகளில் தான் அதிகம் உள்ளது. அதனால் அந்த துறைகளில் மங்களூரு மற்றும் உடுப்பியில் அதிகளவில் முதலீடுகள் வரும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம். கர்நாடகத்தில் 50 ஆண்டுகள் காலம் காங்கிரஸ் கட்சியினர் ஊழல் ஆட்சியையே நடத்தினர். ஊழலில் மூழ்கி இருந்தனர்.
காங்கிரஸ் கட்சி ஊழலின் கங்கோத்திரி. காங்கிரசிடம் இருந்து தான் ஊழலே தொடங்கியது. ஊழலில் சாதனை படைத்த கட்சி காங்கிரஸ். தங்களின் ஊழலை மூடிமறைக்க பா.ஜனதா ஆட்சி மீது காங்கிரஸ் தலைவர்கள் குறை கூறுகிறார்கள். பொய் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் பொய் என்பது தெளிவாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.
மக்கள் வரவேற்பு
கடலோர மாவட்டங்களில் நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பா.ஜனதாவின் முதல்கட்ட ஜனசங்கல்ப யாத்திரை கல்யாண-கர்நாடக பகுதியில் நடந்து முடிந்தது. இப்போது 2-வது கட்ட ஜனசங்கல்ப யாத்திரை கடலோர மாவட்டங்களில் இன்று (நேற்று) தொடங்குகிறது.
ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை சந்திக்கிறோம். நாளை(இன்று) கதக், ஹாவேரி மற்றும் நாளை மறுநாள்(நாளை), பெலகாவியில் இந்த யாத்திரை பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறோம். இந்த யாத்திரைக்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகிறார்கள். இந்த யாத்திரை முடிவடைந்த பிறகு வட கர்நாடகம் மற்றும் தென் கர்நாடகத்தில் இருந்து ஒரே நேரத்தில் ஜனசங்கல்ப யாத்திரையை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
சித்ரதுர்கா மடம்
சுங்கச்சாவடி முறைகேடுகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். அந்த ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். சித்ரதுர்கா முருகா மட விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்ட பூர்வமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.