மந்திரிசபையை மாற்றியமைக்க திட்டம்; பசவராஜ் பொம்மை அடுத்த வாரம் டெல்லி செல்ல முடிவு


மந்திரிசபையை மாற்றியமைக்க திட்டம்; பசவராஜ் பொம்மை அடுத்த வாரம் டெல்லி செல்ல முடிவு
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

கர்நாடக மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடுத்த வாரம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். மூத்த மந்திரிகளை நீக்குவது குறித்து அவர் பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரிசபையில் 6 இடங்கள் காலியாக உள்ளது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருப்பதால், மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால், பதவி கிடைக்காமல் அதிருப்தி அடையும் எம்.எல்.ஏ.க்களை சமாளிப்பது கஷ்டம் என்பதால், பல முறை டெல்லிக்கு சென்றாலும், மந்திரிசபை விரிவாக்கம் பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்காமல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திரும்பி வந்த வண்ணம் உள்ளார். ஆனால் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருப்பதாலும், 6 இடங்களை நிரப்புவற்கு சில மந்திரிகள் நெருக்கடி கொடுப்பதாலும், மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடுத்த வாரம் டெல்லி பயணம்

இதற்காக அடுத்த வாரம் டெல்லி சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் மந்திரி பதவி கிடைக்காததால் ஈசுவரப்பா, ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்டோர் பெங்களூருவில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தனர். இதுபோல், மந்திரி பதவி கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ள பலர், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எந்த குற்றச்சாட்டுகள் கூறினாலும், அதை பற்றி கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

இது பசவராஜ் பொம்மைக்கு எதிரான அதிருப்தியை வெளிகாட்டும் விதமாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீர்மானித்திருக்கிறார். அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் விதமாக மந்திரிசபையை மாற்றியமைக்க மேலிட தலைவர்களும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

6 பேரை நீக்கம்?

அதாவது மந்திரிசபையில் காலியாக உள்ள 6 இடங்களுடன், மூத்த மந்திரிகள் 6 பேரை நீக்கிவிட்டு, அவர்களை கட்சியை வளர்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் மந்திரிசபையில் காலியாகும் 12 பதவிகளுக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதன் மூலம், கட்சியை பலப்படுத்த முடியும் என்றும், அதிருப்தியில் இருப்பவர்களை சரிகட்ட முடியும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கருதுவதாக கூறப்படுகிறது.

அடுத்த வாரம் டெல்லி சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் போது தான், மந்திரிசபை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா? அல்லது மாற்றியமைக்க அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.


Next Story