அரசியல் செயலாளராக இருந்து முதல்-மந்திரியாக உயர்ந்த பசவராஜ் பொம்மை


அரசியல் செயலாளராக இருந்து முதல்-மந்திரியாக உயர்ந்த பசவராஜ் பொம்மை
x

கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவார். இவர், தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கடந்த 1960-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி பிறந்தார். முன்னாள் முதல்-மந்திரி எஸ்.ஆர்.பொம்மை-கங்கம்மா தம்பதியின் மகனான பசவராஜ் பொம்மை, கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தார். பின்னர் புனேயில் வேலை பார்த்தார். பின்னர், வேலையை விட்டு சொந்த ஊருக்கு வந்து தொழிலும் செய்து வந்தார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை, கடந்த 1998-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியில் சேர்ந்து தனது அரசியலை தொடங்கினார். இவர் கடந்த 1998 மற்றும் 2004-ம் ஆண்டு 2 முறை தார்வார் தொகுதியில் மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் முதல்-மந்திரி எச்.கே.பட்டீலின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றினார்.

பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியில் இருந்து விலகி பசவராஜ் பொம்மை, பா.ஜனதாவில் சேர்ந்தார். பின்னர் அதே ஆண்டு ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதியில் பா.ஜனதா சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளராக பசவராஜ் பொம்மை அறியப்படுகிறார்.

கர்நாடகத்தில் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை நடந்த பா.ஜனதா ஆட்சியில் எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றினார். கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்காக அவரது பங்களிப்புகள் மற்றும் நீர்ப்பாசன விஷயங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவிற்காக பசவராஜ் பொம்மை பல தரப்பில் இருந்தும் பாராட்டு பெற்றார். இந்தியாவில் முதல் 100 சதவீத குழாய் நீர்ப்பாசன திட்டத்தை கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் செயல்படுத்திய பெருமை பசவராஜ் பொம்மைக்கு உண்டு.

கடந்த 2019-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது முக்கிய இலாகாக்கள் பசவராஜ் பொம்மைக்கு ஒதுக்கப்பட்டது. அதாவது உள்துறை, சட்டத்துறை மந்திரியாக பணியாற்றினார். மேலும் ஹாவேரி, உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாகவும், கலவரமாகவும் மாறியது. போராட்டக்காரர்கள் மங்களூரு வடககு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உள்துறை மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை, குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த கலவரத்துக்கு காரணமானவர்கள் 60 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் 2020-ம் ஆண்டு பெங்களூரு கலவரம் தொடர்பாகவும் விரிவான விசாரணைக்கு உள்துறை மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். மேலும் கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துகளுக்கு

வன்முறையில் ஈடுபட்டவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையின்போது உள்துறை மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை, ஊரடங்கு விதிகளை கடுமையாக்கினார். சிக்காவி தாலுகா ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் நெருக்கடியை குறைப்பதற்காக அங்குள்ள தனது இல்லத்தை 50 நோயாளிகள் தங்கக்கூடிய கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றினார்.

வயது மூப்பு காரணமாக எடியூரப்பா, 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எடியூரப்பாவின் வழிகாட்டுதலின்பேரில் முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மையை பா.ஜனதா மேலிடம் நியமித்தது. அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். கர்நாடகத்தில் பா.ஜனதாவின் 4-வது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவார். அவர் முதல்-மந்திரியாக பதவியேற்ற முதல் நாளிலேயே மந்திரிசபை கூட்டத்துக்கு பிறகு உயர் கல்விக்கான உதவித்தொகைகளை அறிவித்தார். விவசாயிகளின் குழந்தைகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காான ஓய்வூதியத்தையும் உயர்த்தினார். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கர்நாடகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தினார். தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-ம் ஆண்டு பசவராஜ் பொம்மை அரசு சட்டசபையில் மதமாற்ற தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. பலத்த எதிர்ப்புக்கு இடையே அந்த மசோதா அமல்படுத்தப்பட்டது. மேலும் கடந்த 2022-ம் ஆண்டு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் சர்ச்சை தலைதூக்கியது. இதனால் மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து பசவராஜ் பொம்மை அரசு, கல்வி நிறுவனங்களில் சீருடை தான் அணிய வேண்டும் என்றும், மத அடையாள ஆடைகளை அணியக்கூடாது எனறும் உத்தரவிட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு, 40 சதவீத கமிஷன், கடலோர மாவட்டங்களில் தொடர் கொலை என பசவராஜ் பொம்மை அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. கடந்த மார்ச் மாதம் நடந்த கடைசி மந்திரிசபை கூட்டத்தில் வேலை மற்றும் கல்வியில் சாதிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை பசவராஜ் பொாம்மை அரசு அறிவித்தது. அதன்படி முஸ்லிம்களுக்கான 4 சதவீத தனி இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

எஸ்.ஆர்.பொம்மையும், பசவராஜ் பொம்மையும் கர்நாடகத்தில் தேவேகவுடா-குமாரசாமிக்கு பிறகு முதல்-மந்திரியான 2-வது தந்தை-மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கிறது. அவரது அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பது அவருக்கு பாதகமாக உள்ளது. எனினும் அவர் மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்த பிரசாரம் செய்து வருகிறார்.


Next Story