சிக்காவி தொகுதியில் பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல்


சிக்காவி தொகுதியில் பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்காவி தொகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 4-வது முறையாக மக்கள் ஆசியுடன் வெற்றி பெறுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

சிக்காவி தொகுதியில் போட்டி

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை 2 தொகுதிகளில் அவர் போட்டியிட இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவருக்கு ஒரு தொகுதியில் மட்டுமே கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கி உள்ளது.

இதையடுத்து, நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளிக்கு வந்தார்.

வேட்புமனு தாக்கல்

பின்னர் அங்கிருந்து ஹாவேரி மாவட்டம் சிக்காவிக்கு வந்து தியாமவா தேவி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு, கித்தூர் ராணி சென்னம்மா சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிக்காவி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

அப்போது குடும்பத்தினர், மந்திரி சி.சி.பட்டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நேற்று சுப தினம் என்பதால் சம்பிரதாயத்திற்காக பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல் செய்தார். வருகிற 19-ந் தேதி கட்சி தலைவர்கள், தொண்டர்களுடன் பிரமாண்ட ஊர்வலம் நடத்தி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மக்கள் ஆசியுடன் வெற்றி

சிக்காவி தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 4-வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இந்த முறையும் மக்கள் ஆசியுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. வருகிற 19-ந் தேதி மீண்டும் சிக்காவி தொகுதிக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அன்றைய தினம் பங்கேற்க உள்ளனர். நடிசுர் சுதீப் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான கால அட்டவணை தயார் செய்யப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்தும் நடிகர் சுதீப் பிரசாரத்தை தொடங்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story