ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப்புடன் ஊர்வலம்; பசவராஜ் பொம்மை வேட்புமனு தாக்கல்
ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேட்பு மனு தாக்கல் செய்தார். அதுபோல் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டரும் வேட்பு மனு செய்தனர்.
பெங்களூரு:
பசவராஜ் பொம்மை
கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று(வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இந்த நிலையில் நேற்று 5-வது நாளாக மனு தாக்கல் நடைபெற்றது. இதில் முக்கியமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்தார். அவருடன் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நல்ல நாள் என்பதால் பசவராஜ் பொம்மை ஏற்கனவே கடந்த 15-ந் தேதி மனு தாக்கல் செய்தார்.
நேற்று 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பசவராஜ் பொம்மை ராணி சென்னம்மா சர்க்கிளில் இருந்து ஊர்வலமாக தாசில்தார் அலுவலகத்திற்கு வருகை தந்தார். இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டனர். பசவராஜ் பொம்மையின் வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமான காா்கள் அணிவகுத்து வந்தன.
சித்தராமையா-ஜெகதீஷ் ஷெட்டர்
அதேபோல் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் மந்திரி மகாதேவப்பா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக அவர் வருணா நகரில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களுடன் தேர்தல் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உப்பள்ளி-தார்வார் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக தேர்தல் அலுவலகத்திற்கு வந்தார். இதில் காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, தேர்தல் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர இன்னும் ஏராளமானவர்கள் நேற்று மனுதாக்கல் செய்தனர்.
ஜே.பி.நட்டா
இந்த நிலையில் மனுக்களை தாக்கல் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். மதியம் 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது. அதனால் இன்றைய தினம் அதிகம் பேர் மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனு தாக்கலுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ. பதவிக்காக மட்டும் இன்று(நேற்று) மனு தாக்கல் செய்யவில்லை. உங்களின் ஆர்வத்தை பார்க்கும்போது, பசவராஜ் பொம்மையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கர்நாடக சட்டசபைக்கு அனுப்ப நீங்கள் முடிவு செய்து இருக்கிறீர்கள் என்பது உறுதியாக தெரிகிறது.
காங்கிரஸ் ஊழல் கட்சி
அவருக்கு ஓட்டு கேட்பதற்காக நான் இங்கு வரவில்லை. தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்க வந்துள்ளேன். இதன் மூலம் கர்நாடகத்தில் கங்கை என்ற வளர்ச்சி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். காங்கிரஸ் ஊழல் கட்சி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பி.எப்.ஐ. அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கிவிடும்.
இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
நான் வேறு தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியானது. சொந்த தொகுதியை விட்டு ஓடி செல்பவன் நான் இல்லை. எதுவானாலும் சரி, எனது தொகுதி மக்கள் தான் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் தான் எனது எஜமானர்கள். கர்நாடகத்திற்கு நான் நேர்மையான முறையில் சேவையாற்றியுள்ளேன். நீங்கள் தான் என்னை வளர்த்து பாதுகாத்தீர்கள். எனது கடைசி மூச்சு உள்ளவரை உங்களுக்காக சேவையாற்றுவேன். நான் சாகும்போது, சிக்காவி மண்ணில் தான் என்னை புதைக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
நடிகர் சுதீப்
நடிகர் சுதீப் பேசுகையில், 'பசவராஜ் பொம்மைக்காக நான் இங்கு வந்துள்ளேன். பொம்மை மாமா தனது குறுகிய ஆட்சி காலத்தில் ஏராளமான பணிகளை செய்துள்ளார். இன்னும் மக்கள் பணியாற்ற அவருக்கு அதிக காலஅவகாசம் கிடைக்க வேண்டும். ஒரு இந்தியராக அதிக பணிகளை செய்துள்ள பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். வெளிநாட்டிற்கு செல்லும்போது அங்குள்ள மக்கள் இந்தியாவை பற்றி பெருமையாக சொல்கிறார்கள்' என்றார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிக்காவி தொகுதியில் பசவராஜ் பொம்மை 9,260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் முதலில் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். கர்நாடக மேல்-சபை உறுப்பினராக 2 முறை இருந்துள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகிய அவர் கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து 2013, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். போலீஸ், நீர்ப்பாசனத்துறை மந்திரியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.