கம்புகளால் அடி விழும்: திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. பரபரப்பு பேச்சு; பா.ஜ.க. பதிலடி


கம்புகளால் அடி விழும்:  திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. பரபரப்பு பேச்சு; பா.ஜ.க. பதிலடி
x

பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினருக்கு கம்புகளால் அடி விழும் என கூறிய எம்.பி. நுஸ்ரத் ஜகானுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்து உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் நுஸ்ரத் ஜகான். நடிகையாக இருந்து, நாடாளுமன்ற தொகுதியான பஷீர்ஹத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் சமீபத்தில் பொது கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 2021-ம் ஆண்டு, அவர்கள் பேசும்போது 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் என கூறினார்கள். ஆனால், தோல்வி அடைந்து விட்டனர். அவர்களது படகு கவிழ்ந்து விட்டது.

எவ்வளவு பெரிய படகுகளானாலும் எங்களுக்கு கவலை இல்லை. மம்தா பானர்ஜி என்ற அலையின் முன் அவை அனைத்தும் கவிழ்ந்து விடும்.

இந்த முறை அவர்கள் பெரிய சதி திட்டம் தீட்டி கொண்டிருக்கின்றனர். மக்களின் பணம் நிறுத்தப்பட்டு விட்டது. அவர்கள், 100 நாட்கள் பணிக்கான மாநிலத்திற்கு வழங்க கூடிய நிதியையும் நிறுத்தி விட்டனர். மக்களுக்கான மம்தா பானர்ஜியின் பணியை நிறுத்துவதற்கான ஒரு சதி திட்டம் இதுவாகும்.

வங்காளத்திற்கு அவர்கள் எதுவும் தரவில்லை. ஏன் அவர்களுக்கு வங்காள மக்கள் வாக்களிக்க வேண்டும்? மக்களுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது.

பஞ்சாயத்து தேர்தலின்போது, யார் வந்தாலும், அது பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் கட்சியினராக இருந்தாலும், பசீர்ஹத் மக்களிடம் மூங்கில் கம்புகளால் அடி வாங்குவார்கள் என கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

எனினும், இதற்கு பா.ஜ.க. மாநில செயலாளர் பிரியங்கா திப்ரிவால் பதிலடியாக கூறும்போது, வன்முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் இயற்கையாகவே உள்ளது. அது நிரூபிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இதுபோன்ற சக்திகள் நமது சமூகத்தில் உள்ளன. அவரின் பின்னணியை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள். அவரது திருமண அந்தஸ்து கூட தெளிவாக இல்லை. தொகுதிக்கு வர அவருக்கு நேரமில்லை. 2 அல்லது 3 திருமணங்களை செய்வதில் அவர் பரபரப்பாக இருக்கிறார். அதுவும் கூட அறிவிக்கப்படவில்லை என பிரியங்கா அதிரடியாக கூறியுள்ளார்.


Next Story