துர்கா சிலைகளை கரைத்தபோது வெள்ளப்பெருக்கில் சிக்கிய 450 பேர் மீட்பு மேற்கு வங்காளத்தில் பரபரப்பு
மால்பஜராரில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகள் கடந்த 5-ந்தேதி இரவில் அங்குள்ள மால் நதியில் கரைக்கப்பட்டன.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தின் மால்பஜராரில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகள் கடந்த 5-ந்தேதி இரவில் அங்குள்ள மால் நதியில் கரைக்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். சிலர் வெள்ளத்தில் மூழ்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. உடனடியாக அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. எனினும் 8 பேர் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மீதமுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.2 நாட்களாக நடந்து வந்த இந்த பணிகளின் மூலம் சுமார் 450 பேர் மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாகவும், மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு பா.ஜனதா உயர்மட்டக்குழு ஒன்று நேற்று சென்று ஆய்வு நடத்தியது.