மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி


மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
x

Image Courtacy: ANI

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியானார்கள்.

சோப்ரா,

மேற்கு வங்காளத்தில் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாளாகும். இதனால் கடந்த சில நாட்களாக ஏராளமான வேட்பாளர்கள் மும்முரமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதேநேரம் இந்த வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளில் பயங்கர வன்முைற சம்பவங்கள் அரங்கேறின. எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதை ஆளும் திரிணாமுல் காங்கிரசார் தடுப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

3 பேர் சாவு

இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து கொண்டிருந்தனர்.

அங்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த சிலர் சென்று ெகாண்டிருந்தனர். அவர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் பங்கோரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

இதைப்போல பிர்பும் மாவட்டத்தின் பல இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதிலும் பலர் காயமடைந்துள்ளனர்.

திரிணாமுல் காங். மீது குற்றச்சாட்டு

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரசார் இருப்பதாக இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முகமது சலிம் தனது டுவிட்டர் தளத்தில், 'வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்ற இடதுசாரி-காங்கிரஸ் தொண்டர்களும், வேட்பாளர்களும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளனர்' என குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது. உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் பணிகளில் நீடித்து வரும் வன்முறை சம்பவங்களால் மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.


Next Story