பெங்களூரு: தனியார் பைக் டாக்சிக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்; ஆட்டோ டிரைவர்கள் கைது


பெங்களூரு: தனியார் பைக் டாக்சிக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்; ஆட்டோ டிரைவர்கள் கைது
x

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தனியார் பைக் டாக்சிக்கு தடை கோரி ஆயிரக்கணக்கில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து, வேனில் ஏற்றி சென்றனர்.



பெங்களூரு,


கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஆப் எனப்படும் செயலி அடிப்படையில் இயங்க கூடிய டாக்சி சேவை வழங்கும் சில நிறுவனங்கள் சில தனியார் பைக் டாக்சி சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் ஆட்டோ டிரைவர்களின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனை அடுத்து, பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரி தலைநகர் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகிறோம் என்று அறிவித்தனர்.

இதற்கு 21 ஆட்டோ டிரைவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நகரில் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் இன்று ஓடாது என கூறப்படுகிறது. நகரில் பொதுமக்கள் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால், பொதுமக்கள் சவாரிக்கு ஆட்டோ கிடைக்காமல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், பெங்களூருவில் ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சியை இயக்குகிறது.

இதில் வெள்ளை பலகை கொண்ட வாகனங்களை பைக் டாக்சிக்கு பயன்படுத்துவது சட்ட விரோதம். இதன் காரணமாக எங்களுக்கு வருவாய் குறைந்துள்ளது. அதனால் பைக் டாக்சிக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்றனர்.

சமீபத்தில் ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுனர் ஒருவரை ஆட்டோ டிரைவர் ஒருவர் கடுமையாக தாக்கினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, தனியார் பைக் டாக்சி டிரைவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் இடையேயான விரோத போக்கு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ரேபிடோ தனியார் பைக் டாக்சி மற்றும் பிற இ-பைக் சேவைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.


Next Story