பெங்களூருவில் ருசிகரம்: மழையில் நனைந்தபடி உணவு டெலிவரி செய்த மாற்றுத்திறனாளி நபர் - நெகிழ்ச்சியடைந்த வாடிக்கையாளர் செய்த செயல்!


பெங்களூருவில் ருசிகரம்: மழையில் நனைந்தபடி உணவு டெலிவரி செய்த மாற்றுத்திறனாளி நபர் - நெகிழ்ச்சியடைந்த வாடிக்கையாளர் செய்த செயல்!
x

பெங்களூருவில் மாற்றுத்திறனாளி ஒருவர் கனமழையை பொருட்படுத்தாமல் உணவு டெலிவரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் மாற்றுத்திறனாளி ஒருவர் கடும் மழையிலும் உணவு டெலிவரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவருக்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பெங்களூருவில் வசிக்கும் ரோஹித் குமார் சிங் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நான் உணவு ஆர்டர் செய்தேன். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் உணவு வருவதற்கு காலதாமதம் ஆனது.

உடனே டெலிவரி செய்பவருக்கு போன் செய்தேன். அவர் இன்னும் 10 நிமிடங்களில் வந்து விடுவதாக கூறினா. ஆனால் தாமதமாகவே வந்தார். இதையடுத்து கோபத்தில் கதவை திறந்த எனக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்த நபர் மழையில் நனைந்தபடி, ஊன்றுகோல் உதவியுடன் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் எனது கோபம் எல்லாம் போய் விட்டது. ஏனெனில் அவர் ஒரு மாற்றுத்திறனாளி நபர் ஆவார்.

அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் பெயர் கிருஷ்ணப்பா ரத்தோட். 40 வயதை கடந்த அவருக்கு 3 பிள்ளைகள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்த அவர், தற்போது உணவு டெலிவரி செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மழையிலும் வெயிலிலும் போக்குவரத்து நெரிசலிலும் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓயாமல் உணவு டெலிவரி செய்தால் தான் ஓரளவுக்கு பணம் சம்பாதிக்க முடிவதாக அவர் கூறினார். அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போதே அடுத்த ஆர்டர் வந்துவிட்டதால், எனது நன்றியை எதிர்பார்க்காமல் மழையிலே வண்டியை கிளப்பினார் என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஏராளமானோர் கிருஷ்ணப்பா ரத்தோடுவுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளனர். அவருக்கு தங்களது நிறுவனத்தில் வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.



Next Story