ஒரே நாளில் 70 மில்லி மீட்டர் மழை பெய்தால் பெங்களூருவில் 226 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும்
ஒரே நாளில் 70 மில்லி மீட்டர் மழை பெய்தால், பெங்களூருவில் 226 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என பேரிடர் கண்காணிப்பு குழு கூறி உள்ளது.
பெங்களூரு:
ஒரே நாளில் 70 மில்லி மீட்டர் மழை பெய்தால், பெங்களூருவில் 226 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என பேரிடர் கண்காணிப்பு குழு கூறி உள்ளது.
பெண் சாவு
பெங்களூருவில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் சுரங்க சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கே.ஆர். சர்க்கிள் அருகே உள்ள சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி, சுற்றுலா வந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் ராஜகால்வாய் அருகே சென்ற வாலிபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். மாநகராட்சியின் அறிவியல் முறையற்ற சுரங்க சாலைகளே இந்த சம்பவங்களுக்கு காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு குழு சார்பில் பெங்களூருவில் ஆய்வு நடத்தப்பட்டது.
226 பகுதிகள்
அப்போது பெங்களூருவில் உள்ள சுரங்க சாலைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில், 'பெங்களூருவில் கடந்த சில நாட்களில் பெய்த மழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. பெங்களூருவில் ஒரேநாளில் 70 மில்லி மீட்டர் மழை பெய்தால் சுமார் 226 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விடும்.
இதில் பெங்களூரு தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 61 இடங்களும், மேற்கு பகுதியில் 40 இடங்களும் அடங்கும். எலகங்காவில் மட்டும் சுமார் 11 பகுதிகளில் நீரில் மூழ்கும். இதேபோல் மகாதேவபுராவில் 24 இடங்களும், ஆர்.ஆர்.நகரில் 23 இடங்களும் மூழ்குவதற்கு வாய்ப்புள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பு பெங்களூரு மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.