காஷ்மீரில் பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி சுட்டுக்கொலை; பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இரங்கல்!
பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
பாட்னா,
காஷ்மீரில் புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று காலை ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 4 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு பந்திப்போரா மாவட்டத்தில் சும்பால் எனும் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். வீட்டில் இருந்த முகமது அம்ரேஸ் என்ற அந்த நபர் வெளியே வந்த போது, பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
பின்னர் அங்கிருந்து இருச்சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்கள்.
சமீபத்தில் காஷ்மீரில், வெளிமாநில தொழிலாளர்கள் சிலர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகையதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது காஷ்மீரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மேலும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட முகமது அம்ரேசின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெல்லியில் உள்ள பீகார் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.