சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல்; போலீஸ் எஸ்.பி. காயம்!


சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல்; போலீஸ் எஸ்.பி. காயம்!
x

புல்டோசர்கள் கொண்டுவரப்பட்டு வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்தது.இதனை கண்டு குடியிருப்புவாசிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னாவின் நேபாளி நகர் பகுதியில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட 70 வீடுகளை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேபாளி நகர் பகுதியில் குறிப்பிட்ட நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் சட்டவிரோதமானது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அங்குள்ள வீடுகள் இடிக்கப்படும் என்பது குறித்து அப்பகுதி மக்களுக்கு சில நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பீகார் மாநில வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது.

அங்கு வசிப்போரிடம் உடனடியாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. சிறிதுநேரத்தில் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால், கூடுதலாக 2000 போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, 14 புல்டோசர்கள் கொண்டுவரப்பட்டு வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்தது. இதனை கண்டு உள்ளூர்வாசிகள் ஆத்திரத்தில் கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் தாக்கியதில் பாட்னா நகர போலீஸ் எஸ்.பி. காயமடைந்தார்.

கலவரக்காரர்களை கட்டுப்படுத்த, கூட்டத்தை கலைக்க போலீஸ் குழுவும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. உள்ளூர்வாசிகள் சிலர் அப்பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்கு வெளியே சிலிண்டர்களை கொண்டு வந்து எரித்தனர். இதன்மூலம், போலீசார் தங்கள் அருகில் வருவதை தடுத்தனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.


Next Story