பில்கிஸ் பானு வழக்கு.. குற்றவாளிகள் சரண் அடைய கூடுதல் அவகாசம் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு


பில்கிஸ் பானு வழக்கு.. குற்றவாளிகள் சரண் அடைய கூடுதல் அவகாசம் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு
x

மனுதாரர்கள் சரணடைவதை ஒத்திவைப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி:

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8ம் தேதி ரத்து செய்தது. குற்றவாளிகள் அனைவரும் சிறைக்கு போகவேண்டும், 21-ம் தேதிக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து சிறைக்கு செல்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி குற்றவாளிகள் 11 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகளின் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மனுதாரர்கள் சரணடைவதை ஒத்திவைப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கு விவரம்:

2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு, ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என 2008-ம் ஆண்டு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரும், கருணை அடிப்படையில் குஜராத் அரசாங்கத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story