பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு பதில்மனு


பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு பதில்மனு
x

தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர் என சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

அதில், விடுவிக்கப்பட்ட 11 பேரும் பதில் அளிக்கவும், கருணை அடிப்படையில் விடுவித்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கும் கடந்த மாதம் 9-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், குஜராத் அரசின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் ஒப்புதலுடன்...

அதில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு கடந்த 1992-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கருணை அடிப்படையில் விடுவிப்பதற்கான கொள்கை வகுக்கப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரை விடுவிப்பதற்கான குஜராத் அரசின் முன்மொழிவுக்கு விசாரணை அமைப்புகளும், செசன்ஸ் கோர்ட்டுகளும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் தங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய சுபாஷினி அலி, மகுவா மொய்த்ரா ஆகியோர் வழக்குரிமையை கொண்டிருக்கவில்லை. மனுதாரர்கள் யாரும் எங்கள் வழக்கில் தொடர்பை கொண்டிருக்கவில்லை என அந்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story