"ஆன்லைன் கேம்களை ஒழுங்குப்படுத்தும் மசோதா"- கேரள முதல் மந்திரி பினராயி விஜயன்
ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள திருத்தத்தை அரசு பரிசீலித்து வருவதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
கோழிக்கோடு,
சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஏ.பி. அனில்குமார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பினராயி விஜயன், இந்த விவகாரத்தில் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளதாகவும், நீதிமன்றத்துக்கு உட்பட்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றார்.
மாநிலத்தில் பணத்துக்காக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் பலரை பெரும் நிதிச்சுமைக்கும், தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில், கேரளா கேமிங் சட்டம் 1960, பிப்ரவரி 2021ல் திருத்தம் செய்யப்பட்டு, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கேரளா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆன்லைன் கேம் தளங்கள் குழந்தைகள் உட்பட எந்த வயதினரும் கணக்கைத் திறப்பதை எளிதாகவும் இலவசமாகவும் செய்வதாகவும் பெரும் பரிசுத் தொகை மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதன் மூலம் மக்கள் ஈர்க்கப்படுவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டு, ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் கேம்களை கண்டிப்பாக கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள திருத்தத்தை அரசு பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.