ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம்: நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் தாக்கு
ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் கேட்ட விவகாரம் தொடர்பாக, நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தெலுங்கானாவின் ஜகீராபாத் தொகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை ஒன்றுக்கு சென்ற அவர், அங்கு பிரதமர் மோடி படம் இல்லாததை பார்த்து மாவட்ட கலெக்டரை கண்டித்தார்.
அத்துடன் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கான செலவில் மத்திய-மாநில அரசுகளின் பங்கு என்ன? என கலெக்டரிடம் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நிதியமைச்சகமும் வெளியிட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், 'தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இதற்கு உரிமை கோருவதற்காக எந்த அரசியல் தலைவர்களின் புகைப்படத்துக்கும் அப்போது தேவை எழவில்லை' என்று சாடியுள்ளார்.
பிரதமரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நிதி மந்திரி நடத்தியிருக்கும் இந்த நாடகம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.