கலபுரகியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜனதா-காங்கிரஸ்


கலபுரகியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜனதா-காங்கிரஸ்
x

கர்நாடகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்று கலபுரகி. முன்பு குல்பர்கா என அழைக்கப்பட்ட கலபுரகி கல்யாண கர்நாடக பகுதியில் அமைந்துள்ள முக்கிய மாவட்டமாகும். கர்நாடகத்தில் மராட்டியம் மற்றும் தெலுங்கானா மாநில எல்லையில் கலபுரகி மாவட்டம் அமைந்துள்ளது.

கலபுரகி மாவட்டம்

கலபுரகி மாவட்டத்தில் கன்னட மொழி பேசும் மக்கள் 65 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். இதற்கு அடுத்தப்படியாக உருது பேசும் மக்கள் 18 சதவீதம் பேர் வசித்து வருகிறார்கள். மேலும் லம்பாடி மொழி பேசும் மக்கள் 7 சதவீதமும், தெலுங்கு பேசும் மக்கள் 4 சதவீதமும், மராத்தி மற்றும் இந்தி பேசும் மக்கள் தலா 2 சதவீதமும் வசித்து வருகிறார்கள். கலபுரகி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாவட்டமாகும். கலபுரகி மாவட்டத்தில் அப்சல்புரா, ஜேவர்கி, சித்தாப்புரா, சேடம், சிஞ்சோலி, கலபுரகி புறநகர், கலபுரகி தெற்கு, கலபுரகி வடக்கு, ஆலந்தா ஆகிய 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கலபுரகி மாவட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சமபலத்துடன் உள்ளன. இங்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி பலவீனமாக உள்ளது.

அப்சல்புரா-ஜேவர்கி

அப்சல்புரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எம்.ஒய்.பட்டீல். இவரே காங்கிரஸ் சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா கட்சி கடந்த முறை தோல்வி அடைந்த மாலிகய்யா குத்தேதாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் சிவக்குமார் நட்டிகார் போட்டியிடுகிறார்.

தொகுதி மறுசீரமைப்புபடி கடந்த 2013-ம் ஆண்டு ஜேவர்கி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அஜய் தரம்சிங். இவர், முன்னாள் முதல்-மந்திரி தரம்சிங்கின் பேரன் ஆவார். இவரே மீண்டும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் சிவனகவுடா பட்டீல் போட்டியிடுகிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சி தொட்டப்பகவுடா சிவலிங்கப்பகவுடாவை வேட்பாளராக களமிறங்கி உள்ளது.

சித்தாப்புரா-சேடம்

தொகுதி மறுசீரமைப்புபடி கடந்த 2008-ம் ஆண்டு சித்தாப்புரா தொகுதி உருவாக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு இங்கு நடந்த முதல் தேர்தலில் தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு 2013 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது மகனும், முன்னாள் மந்திரியுமான பிரியங்க் கார்கே போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த முறையும் அவரே அங்கு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் மணிகண்டா ரத்தோடும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சுபாஷ் சந்திரா ரத்தோரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சேடம் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்குமார் பட்டீல். இந்த முறையும் அவரே சேடம் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த சரணபிரகாஷ் பட்டீலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி பால்ராஜ் குத்தேதார் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

சிஞ்சோலி-ஆலந்தா

சிஞ்சோலி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ெவற்றி பெற்றவர் உமேஷ் ஜாதவ். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவை வீழ்த்தினார். பின்னர் அங்கு நடந்த இடைத்தேர்தலில் உமேஷ் ஜாதவின் மகன் அவினாஷ் ஜாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த முறையும் சிஞ்சோலி தொகுதியில் இருந்து அவினாஷ் ஜாதவ் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சுபாஷ் ரத்தோடு களம் காண்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சஞ்சீவ் யக்காப்பூர் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

ஆலந்தா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுபாஷ் குத்தேதார். பா.ஜனதாவை சேர்ந்த இவரே மீண்டும் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த பி.ஆர்.பட்டீல் களம் காண்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளராக மகேஸ்வரி வாலே நிறுத்தப்பட்டுள்ளார்.

கலபுரகி புறநகர்-தெற்கு-வடக்கு

கலபுரகி புறநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ஜனதாவின் பசவராஜ் மட்டிமத் உள்ளார். அவர் மீண்டும் பா.ஜனதா சார்பில் கலபுரகி புறநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரேவு நாய்க் பெலமகி களம் காண்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி இங்கு போட்டியிடவில்லை. அக்கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கலபுரகி தெற்கு தொகுதி பா.ஜனதா வசம் உள்ளது. இங்கு அக்கட்சி சார்பில் தத்தாத்ரேயா பட்டில் ரேவூர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த முறையும் அவரே பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி கடந்த முறை தோல்வி அடைந்த அல்லாம்பிரபு பட்டீலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் கிருஷ்ணா ரெட்டி போட்டியிடுகிறார்.

கலபுரகி வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கனீஷ் பாத்திமா. இந்த முறையும் அவருக்கே காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. பா.ஜனதா சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த சந்திரகாந்த் பட்டீல் மீண்டும் களமிறங்குகிறார். ஜனதா

தளம்(எஸ்) சார்பில் நசீர் ஹுசைன் போட்டியிடுகிறார்.

இந்த 3 தொகுதிகளிலும் தொகுதி மறுசீரமைப்பின்படி கடந்த 2008-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story