கர்நாடக பா.ஜனதா பழங்குடியினர் அணி மாநாடு
பல்லாரியில் கர்நாடக பா.ஜனதா பழங்குடியினர் அணி மாநாடு நாளை நடைபெற உள்ளது.
பெங்களூரு:
போக்குவரத்து மற்றும் பழங்குடியினர் நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக பா.ஜனதா எஸ்.டி.(பழங்குடியினர்) அணி சார்பில் பல்லாரியில் 20-ந் தேதி(நாளை) மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை அரசின் சாதனை விளக்க மாநாட்டை போல் நடத்துகிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, கனகதாசர், வால்மீகி ஆகிய மகான்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பழங்குடியினர் மாநாட்டில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள். 10 ஆயிரம் பஸ்கள் உள்பட 25 ஆயிரம் வாகனங்களில் கட்சி தொண்டர்கள் மாநாட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். மாநாடு நடைபெறும் இடத்தில் தற்காலிக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ், 200-க்கும் மேற்பட்ட கழிவறைகள், 28 இடங்களில் வாகன நிறுத்தம் வசதியை செய்துள்ளோம். மாநாடு நடைபெறும் இடத்தில் 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.