பா.ஜ.க.வின் எழுச்சிக்கு மோடியே காரணம்- நட்டா பெருமிதம்


பா.ஜ.க.வின் எழுச்சிக்கு மோடியே காரணம்- நட்டா பெருமிதம்
x
தினத்தந்தி 17 Feb 2024 1:10 PM GMT (Updated: 18 Feb 2024 11:47 AM GMT)

தென்மாநிலங்களில் 29 மக்களவை எம்.பி.க்களும், எட்டு மாநிலங்களவை எம்.பி.க்களும் பா.ஜ.க.வுக்கு கிடைக்க உள்ளது என்று ஜே.பி.நட்டா கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் நட்டா மற்றும் கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நாடுமுழுவதிலும் இருந்து 11,500 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்

கூட்டத்தில் கட்சி தலைவர் நட்டா பேசும் போது கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் நாம் 370 இடங்களைக் கடக்க வேண்டும். தேசிய ஜனநாய கூட்டணி 400 இடங்களைக் கடக்க வேண்டும். கட்சி முந்தைய சாதனைகளை முறியடிக்க நிர்வாகிகள் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். மோடி அரசாங்கம் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

2014 -ல் மோடியின் எழுச்சிக்கு முன்பு பா.ஜ.க ஐந்து மாநிலங்களை மட்டுமே ஆட்சி செய்தது .இப்போது 12 மாநிலங்களில் அது ஆட்சியில் உள்ளது . பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 17 மாநிலங்களில் தற்போது ஆட்சியில் இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடியின் எழுச்சியே காரணம். 2022-ல் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. சமீபத்தில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. இது அவ்வளவு சாத்தியமானதல்ல.

மேற்கு வங்கத்தில், பா.ஜ.க 10 சதவீத வாக்குகள் மற்றும் 3 எம்.எல்.ஏ.க்களுடன் இருந்தது. இன்று 38.5 சதவீத வாக்குகள் பெற்று 77 எம்.எல்.ஏ.க்களுடன் உயர்ந்துள்ளது, அடுத்த முறை அந்த மாநிலத்தில் நமது ஆட்சி தான் வரும் . தெலுங்கானாவில் நமது வாக்கு இரட்டிப்பாகி இருக்கிறது. "தாமரை எல்லா இடங்களிலும் உள்ளது. தென்மாநிலங்களில் 29 மக்களவை எம்.பி.க்களும், எட்டு மாநிலங்களவை எம்.பி.க்களும் நம் கட்சிக்கு உள்ளனர். இது காங்கிரசுக்கு இருப்பதை விட அதிகம். இவ்வாறு நட்டா பேசினார். பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் மற்றும் அயோத்தியில் ராமர் கோவில் குறித்து நட்டா பேசிய போது ஆயிரக்கணக்கான கட்சி பிரதிநிதிகள் எழுந்து நின்று மோடியை உற்சாகப்படுத்தும் வகையில் கோஷமிட்டனர்.


Next Story