அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய ராகுல் காந்தியை கண்டு பா.ஜ.க. அச்சம்; ரன்தீப் சுர்ஜேவாலா


அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய ராகுல் காந்தியை கண்டு பா.ஜ.க. அச்சம்; ரன்தீப் சுர்ஜேவாலா
x

சீன ஊடுருவல், வேலைவாய்ப்பு இன்மை, பணவீக்கம் பற்றி குரல் எழுப்பிய ராகுல் காந்தியை கண்டு பா.ஜ.க. அச்சமடைந்து உள்ளது என ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியது. அப்போது அதன் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்திற்கு மாற்றி முறைகேடு நடந்ததாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடந்த 2012ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழில் அதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் மீது அவர் குற்றம்சாட்டி இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததா? என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மூத்த தவைர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து, சோனியாகாந்தி கடந்த 8ந்தேதியும், ராகுல்காந்தி கடந்த 2ந்தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்ததால், சோனியாகாந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில், வேறு தேதியை ஒதுக்கும்படி கேட்டு கொண்டனர்.

அதன் பேரில் ராகுல் காந்தியை 13ந்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்றும் சோனியா காந்தியை 23ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

இதன்படி, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகிய ராகுல் காந்தியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதன் பின்னணியில் ஆளும் பா.ஜ.க. அரசு இருப்பதாகவும், இது அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை எனவும் கூறி நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இரண்டாவது நாள் விசாரணைக்காக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

இன்றைய தினமும், 6 மணி முதல் எட்டு மணி நேரம் வரை ராகுலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்திக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியதன் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ராகுல் காந்தியின் வலிமையான எதிர்ப்பினை கண்டு பா.ஜ.க. அச்சமடைந்து உள்ளது. ஏன் அச்சமடைந்து உள்ளது? சீன படைகள் ஊடுருவியபோது, அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தது. இன்று வரை சீனாவை அரசால் வெளியேற்ற முடியவில்லை.

பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவை பற்றி மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்பி வருகிறார். மூழ்கி வரும் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின்மை பற்றி அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்றின்போது தவறான நிர்வாகம் பற்றி அவர் சுட்டி காட்டினார். அதன்பின் அரசை இலவச தடுப்பூசி போட கட்டாயப்படுத்தினார்.

ராகுல் காந்தியால் மத்திய அரசு கலக்கம் அடைந்து உள்ளது. அதனாலேயே, ராகுல் காந்தியால் பிரச்னை வருகிறது என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

50 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு விகிதம் மிக மோசமடைந்து உள்ளது. ரூபாயின் மதிப்பு 75 ஆண்டுகளில் கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது எனவும் சுர்ஜேவாலா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Next Story