மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது; ஜே.டி.எஸ். வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் கிடைத்தது
மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது. ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் பா.ஜனதாவுக்கு கிடைத்தது.
மைசூரு: மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது. ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் பா.ஜனதாவுக்கு கிடைத்தது.
மேயர், துணை மேயர் தேர்தல்
கர்நாடகத்தில் மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட சில மாநகராட்சிகளுக்கு 4-ம் கட்ட மேயர், துணை மேயர் தேர்தலுக்கு இடஒதுக்கீடு அளித்து கர்நாடக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி மைசூரு மாநகராட்சி மேயர் பதவி பொது பிரிவு ஆண்களுக்கும், துணை மேயர் பதவி எஸ்.டி. பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் செப்டம்பர் 7-ந்தேதி (நேற்று) நடக்கும் என்று தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் லட்சுமிகாந்த ரெட்டி அறிவித்தார். இந்த தேர்தலை பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து எதிர்கொள்ள முடிவு செய்தது. மேயர் பதவி பா.ஜனதாவுக்கும், துணை மேயர் பதவி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. கவுன்சிலர்கள் கட்சி தாவலை தடுக்க 3 கட்சிகளும் தங்கள் கவுன்சிலர்களை கடந்த சில தினங்களாக ரகசிய இடத்தில் தங்க வைத்தது.
வேட்புமனு தாக்கல்
பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டாலும் கடைசி நேரத்தில் எதுவும் திருப்பம் நிகழுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் கடைசி நேரத்தில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. அதன்பற்றிய விவரங்கள் பின்வருமாறு:-
மைசூரு மாநகராட்சி பழைய கவுன்சில் அரங்கத்தில் நேற்று திட்டமிட்டப்படி மேயர், துணை மேயர் தேர்தல் நடந்தது. காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் சிவக்குமார், காங்கிரஸ் சார்பில் சையத் ஹசரத்துல்லா, ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் கோபி மற்றும் பா.ஜனதா சார்பில் ஸ்ரீதர் ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது
இதையடுத்து மனுக்களை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி, மனுக்களை வாபஸ் பெற 5 நிமிடம் காலஅவகாசம் கொடுத்தார். அப்போது ஜனதா தளம்(எஸ்) சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த கோபி, பா.ஜனதா சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஸ்ரீதர் ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து களத்தில் காங்கிரசின் சையத் ஹசரத்துல்லாவும், பா.ஜனதாவின் சிவக்குமாரும் இருந்தனர்.
கவுன்சிலர்கள் கைகளை உயர்த்துவதன் மூலம் தேர்தல் அதிகாரி தேர்தலை நடத்தினார். முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சையத் ஹசரத்துல்லாவுக்கு ஆதரவாக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் உள்பட 28 பேர் கைகளை உயர்த்தினர். ஜனதாதளம்(எஸ்) கவுன்சிலர் நிர்மலாவும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கைகளை உயர்த்தினார். இதையடுத்து பா.ஜனதா வேட்பாளர் சிவக்குமாருக்கு ஆதரவாக பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கவுன்சிலர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்பட 47 பேர் கைகளை உயர்த்தினர். இதனால், பா.ஜனதா வேட்பாளர் சிவக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்பாராத திருப்பங்கள்
இதன்காரணமாக மைசூரு மாநகராட்சி புதிய மேயராக பா.ஜனதாவை சேர்ந்த சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் தொடர்ந்து 2-வது முறையாக மைசூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது. இதையடுத்து துணை மேயர் தேர்தல் நடந்தது. இதில் தான் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறின. துணை மேயர் பதவிக்கு பா.ஜனதாவை சேர்ந்த ரூபா, ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த நிர்மலா, ரேஷ்மா பானு, காங்கிரஸ் சார்பில் ஷோபா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர் ஷோபா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டார்.
இதையடுத்து மற்ற 3 பேரின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அப்போது, ரேஷ்மா பானு தாக்கல் செய்த வேட்புமனுவில் முறையான ஆவணங்கள் இல்லை என தெரிகிறது. இதனால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இதன்காரணமாக அவர் அதிர்ச்சி அடைந்தார். மற்ற 2 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
பா.ஜனதாவுக்கு ஜாக்பாட்
ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் நிர்மலாவுக்கு ஆதரவாக கைகளை உயர்த்தும்படி தேர்தல் அதிகாரி கூறினார். அப்போது, அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் மட்டும் கைகளை உயர்த்தினர். நிர்மலா, மேயர் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததால், அவருக்கு ஆதரவாக வாக்களிக்க ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் மறுத்துவிட்டனர். இதன்காரணமாக பா.ஜனதா வேட்பாளருக்கு ஜாக்பாட் அடித்தது.
அதாவது பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ரூபாவுக்கு வேறு வழியில்லாமல் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ரூபா வெற்றி பெற்று துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மைசூரு மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக மேயர், துணை மேயர் பதவியை ஒருசேர பா.ஜனதா கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்து
புதிய மேயர், துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவக்குமார், ரூபாவுக்கு கவுன்சிலர்கள், மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்பட பல்வேறு தரப்பினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஒப்பந்தபடி பா.ஜனதாவுக்கு மேயர் பதவியும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு துணை மேயர் பதவியும் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் ரேஷ்மா பானுவின் குளறுபடியால் பா.ஜனதாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
ஆம்புலன்சில் வந்து வாக்களித்த பா.ஜனதா பெண் கவுன்சிலர்
பா.ஜனதாவை சேர்ந்த 28-வது வார்டு கவுன்சிலர் அஸ்வினி சரத் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்த சமயத்தில், அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆக்சிஜன் உதவியுடன் வந்து பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தார். துணை மேயருக்கு அவர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது. ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் பா.ஜனதாவுக்கு கிடைத்தது.