ஆடு-புலி ஆட்டத்தில் ஆட்சியை பிடித்த பா.ஜனதா


ஆடு-புலி ஆட்டத்தில் ஆட்சியை பிடித்த பா.ஜனதா
x

2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆடு-புலி ஆட்டத்தில் ஆட்சியை பிடித்த பா.ஜனதா கட்சியை சேர்ந்த 3 முதல்-மந்திரிகள் பொறுப்பு வகித்திருப்பது தொடர்பான ஒரு கண்டோட்டம்

கர்நாடகத்தில் கடந்த 14-வது சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 122 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தது. சித்தராமையா அரசு மீது நிலமுறைகேடு புகார், விலையுயர்ந்த கைக்கெடிகாரம் பரிசாக பெற்றது என பல்வேறு புகார்கள் எழுந்தன. இருப்பினும் சித்தராமையா 5 ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக முடித்தார்.

இதையடுத்து 15-வது சட்டசபை தேர்தலில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்தன. எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால் பல அரசியல் சதுரங்க ஆட்டங்கள் அரங்கேறின. குறிப்பாக ஜனதாதளம் (எஸ்) கட்சி காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. அதன்பிறகு ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.

இந்த தேர்தலை பா.ஜனதா எடியூரப்பா தலைமையிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி குமாரசாமி தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சித்தராமையா தலைமையிலும் எதிர்க்கொண்டன. பா.ஜனதா கட்சி 222 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 222 தொகுதிகளிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 222 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மொத்தம் 83 கட்சிகள் இந்த தேர்தலில் மல்லுக்கட்டின. மேலும் சுயேச்சைகள் பலரும் போட்டியிட்டனர். இருப்பினும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் போட்டிகள் நிலவியது.

15-வது சட்டசபை தேர்தல் 2018-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக 222 தொகுதிகுக்கு நடந்தது. பெங்களூரு ஜெயநகர் மற்றும் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் மே மாதம் 15-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தம் 2 கோடியே 55 லட்சத்து 99 ஆயிரத்து 295 ஆண்கள், 2 கோடியே 49 லட்சத்து 90 ஆயிரத்து 888 பெண்கள் உள்பட மொத்தம் 5 கோடியே 7 லட்சத்து 18 ஆயிரத்து 198 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதில், 1 கோடியே 86 லட்சத்து 4 ஆயிரத்து 558 ஆண்கள், 1 கோடியே 78 லட்சத்து 18 ஆயிரத்து 310 பெண்கள், 462 மூன்றாம் பாலினத்தவர் என 3 கோடியே 67 லட்சத்து 69 ஆயிரத்து 954 பேர் வாக்களித்தனா். இது 72.57 சதவீத வாக்குப்பதிவு ஆகும். இதில் 30 ஆயிரத்து 388 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி 104 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 80 இடங்களிலும், ஜனதா

தளம் (எஸ்) கட்சி 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சி, கே.பி.ஜே.பி. கட்சி தலா ஒரு இடங்களிலும், சுயேச்சை ஒரு இடங்களிலும் வெற்றி வாகை சூடினர். ஆனால் ஆட்சி அமைக்க 113 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. ஆனால் தனி பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதா கட்சி, தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கவர்னரும் ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆட்சி அமைக்க அனுமதி அளித்தார். அதன்படி 2018-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக எடியூரப்பா பொறுப்பேற்றார். ஆனால் அவரால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால், கவர்னர் அளித்த கெடுவுக்கு முன்பாகவே மே மாதம் 23-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதாவது எடியூரப்பா 6 நாட்கள் மட்டுமே முதல்-மந்திரியாக பதவியில் இருந்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியது. ஜனதாதளம்(எஸ்) கட்சியை விட கூடுதல் இடங்களில் ெவற்றி பெற்றிருந்தாலும் காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு விட்டு கொடுத்தது. இதையடுத்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் 2018-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் ஒரு ஆண்டு 64 நாட்கள் பதவி வகித்த நிலையில், 2019-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

அதாவது, பா.ஜனதா கட்சி 'ஆபரேஷன் தாமரை' திட்டத்தின் கீழ் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் இருந்து 17 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்தது. அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தனர். இதையடுத்து 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பின்னர் 2019-ம் ஆண் டிசம்பரில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட 15 பேரில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வயது மூப்பு காரணமாக கட்சி மேலிடத்தின் வற்புறுத்தலின் பேரில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மொத்தம் 2 ஆண்டுகள் 2 நாட்கள் ஆட்சி செய்தார். மேலும் எடியூரப்பா தனது ஆதரவாளரான பசவராஜ் பொம்மையை முதல்-மந்திரியாக தேர்வு செய்து அரியணையில் அமர்த்தினார். பசவராஜ் பொம்மை 2021-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதி முதல், முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 122 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. சித்தராமையா முதல்-மந்திரியாக 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார். இதையடுத்து 2018-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), பா.ஜனதா உள்பட மொத்தம் 83 கட்சிகளும் மல்லுகட்டின. மொத்தம் 2,636 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 2,125 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்த தேர்தலில் கட்சி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் பின்வருமாறு:-

பா.ஜனதா கட்சி 224 தொகுதிகளில் போட்டியிட்டு 104 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் அக்கட்சி 1 கோடியே 33 லட்சத்து 28 ஆயிரத்து 524 வாக்குகளை பெற்றது. இது 36.35 சதவீதம் ஆகும்.

காங்கிரஸ் கட்சி 224 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் அக்கட்சி 80 தொகுதி களில் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு மொத்தம்

1 கோடியே 39 லட்சத்து 86 ஆகிரயத்து 526 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இது 38.14 சதவீதம் ஆகும்.

ஜனதாதளம்(எஸ்) கட்சி 224 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு 67 லட்சத்து 26 ஆயிரத்து 667 பேர் வாக்களித்தனர். இது 18.3 சதவீதம் ஆகும்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு மொத்தம் 14 லட்சத்து 38 ஆயிரத்து 106 பேர் வாக்களித்தனர். இது 3.9 சதவீதம் ஆகும். பகுஜன் சமாஜ் கட்சி 1 லட்சத்து 8 ஆயிரத்து 592 வாக்குகளை பெற்றது. இது 0.32 சதவீதம் ஆகும். கே.பி.ஜே.பி. கட்சி 74 ஆயிரத்து 229 வாக்குகள் பதிவாகியது. இது 0.2 சதவீதம் ஆகும். மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு 6 லட்சத்து 83 ஆயிரத்து 632 வாக்குகள் பதிவானது. இது 2.2 சதவீதம் ஆகும். நோட்டோவுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 841 வாக்குகள் பதிவாகியது. இது 0.9 சதவீதம் ஆகும்.



Next Story