அயோத்தியா நிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மேயர் பிளாட் போட்டு விற்பனை; அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு


அயோத்தியா நிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மேயர் பிளாட் போட்டு விற்பனை; அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு
x

அயோத்தியா நிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மேயர் உள்பட 40 பேர் சட்டவிரோத பிளாட் விற்பனையில் ஈடுபட்டு அரசுக்கு ரூ.100 கோடிக்கு கூடுதலான வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.



அயோத்தியா,



உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கு முன் நடப்பு வருட தொடக்கத்தில், அயோத்தியாவில் சட்டவிரோத நிலம் வாங்கல், கொடுக்கல் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

எதிர்க்கட்சிகள் இதனை எழுப்பின. உள்ளூர் எம்.பி. லல்லு சிங் என்பவர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு இதுபற்றி கடிதம் ஒன்றையும் எழுதி சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார். இதுபற்றிய பட்டியலும் வெளிவந்தது. தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சியும் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

இந்நிலையில், அயோத்தியா வளர்ச்சி கழகத்தின் துணை தலைவர் விஷால் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அயோத்தியா பகுதியில் சட்டவிரோத வகையில் நிலம் வாங்கி, விற்பனை செய்து, அவற்றில் கட்டுமான பணியிலும் ஈடுபட்ட 40 பேர் கொண்ட பட்டியல் கிடைத்து உள்ளது. அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த பட்டியலில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேத் பிரகாஷ் குப்தா, பா.ஜ.க. மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் மற்றும் அக்கட்சியின் மில்கிபூர் தொகுதியை சேர்ந்த முன்னாள் சட்டசபை உறுப்பினரான கோரக்நாத் பாபா என்பவரும் உள்ளனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ.க. மேயர் இருவரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் இது திட்டமிட்ட சதி என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த வழக்கில் தங்களை தவறாக சிக்க வைத்து விட்டனர் என அவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், அயோத்தியாவில் பா.ஜ.க. தொண்டர்களின் பாவம்! நில மாபியா கும்பலுடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.க.வின் மேற்குறிப்பிட்ட 3 பேரும் சட்டவிரோத காலனிகளை உருவாக்கி உள்ளனர் என எஸ்.பி. ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதன்படி, அந்தந்த துறைகளின் உதவியுடன் சட்டவிரோத 30 காலனிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனால், அரசுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.


Next Story