நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 14 பேருக்கு சம்மன்...!
நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரி தேவி உட்பட 14 பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2004-09 காலக்கட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தார்.
அப்போது இந்திய ரெயில்வேயில் முறைகேடாக ஆட்சேர்ப்பு மற்றும் நிலத்திற்கு பதிலாக வேலை வழங்குவதாக சொல்லி மோசடி என பல குற்றங்களை செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் வழக்கில் ஆதாரங்கள் கிடைத்த பிறகு, லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி, மத்திய ரயில்வே முன்னாள் பொது மேலாளர் சவுமியா ராகவன் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து அவர்களுக்கு ஜாமினும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்ட 14 பேருக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி, மார்ச் 15ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராப்ரி தேவி, எங்கேயும் நாங்கள் பயந்து ஓட மாட்டோம் . கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். பீகாரில் லாலு பிரசாத் யாதவைக் கண்டு பாஜக பயப்படுகிறது என்று கூறினார்.