பத்ராவதியில் கால்பதிக்க முடியாமல் திணறும் பா.ஜனதா


பத்ராவதியில் கால்பதிக்க முடியாமல் திணறும் பா.ஜனதா
x

எடியூரப்பாவின் சொந்த மாவட்டத்தில் உள்ள பத்ராவதியில் பா.ஜனதா கால்பதிக்க முடியாமல் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

kaபெங்களூரு:

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் 2 கட்டங்களாக 166 தொகுதிகளுக்கும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும், பா.ஜனதா 189 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் தேர்தல் களம் களைக்கட்ட தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் சொந்த மாவட்டம் சிவமொக்கா. இதனால், சிவமொக்கா பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. சட்டசபை தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி விடும். ஆனால், எடியூரப்பாவின் சொந்த மாவட்டமாக இருந்தாலும், சிவமொக்காவில் பத்ராவதி தொகுதியில் மட்டும் பா.ஜனதா இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி 3-ம் இடத்துக்கே தள்ளப்பட்டு வருகிறது.

எடியூரப்பாவின் சொந்த மாவட்டமாக இருந்தாலும் பத்ராவதியில் மட்டும் பா.ஜனதா கால்பதிக்க முடியாமல் திணறி வருகிறது. இங்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), ஜனதா கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 1994-ம் ஆண்டு முதல் கடந்த 2018-ம் ஆண்டு வரை நடந்த 6 சட்டசபை தேர்தல்களில் காங்கிரசின் சங்கமேஸ்வரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் அப்பாஜி கவுடாவும் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை சங்கமேஸ்வர் வெற்றி பெற்றார். ஆனால் சங்கமேஸ்வருக்கு கடும் போட்டி அளித்து வந்த அப்பாஜி கவுடா இறந்து விட்டதால், அவருக்கு எதிராக பலமான வேட்பாளர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர் போட்டியிடுகிறார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் மறைந்த அப்பாஜி கவுடாவின் மனைவி சாரதா அப்பாஜி கவுடாவும், பா.ஜனதா சார்பில் மங்கோட்டி ருத்ரேசும் போட்டியிடுகிறார்கள்.


Next Story