ஊழல் பணத்தை கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி


ஊழல் பணத்தை கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி
x

ஊழலில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு:-

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தொழில் முதலீட்டாளர்கள்

லோக்அயுக்தா போலீசார் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ஒரு அதிகாரியின் வீட்டில் பணம், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் கிடைத்துள்ளன. இது மிகப்பெரிய ஊழலை காட்டுவதாக உள்ளது. இது 40 சதவீத பா.ஜனதா ஆட்சிக்கு சாட்சி. அந்த அதிகாரி இந்த அளவுக்கு ஊழல் செய்ய எப்படி தைரியம் வந்தது?.

பெங்களூரு மாநகராட்சி பொறுப்பு மந்திரியாக இருப்பவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை. பெங்களூருவின் வளர்ச்சி, மென்பொருள் நிறுவனங்கள் போன்றவறறால் இந்த நகருக்கு பெருமை அளிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது இந்த ஆட்சியின் ஊழல்களால் பெங்களூருவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தொழில் முதலீட்டாளர்கள் பெங்களூருவில் தொழில் தொடங்க எப்படி வருவார்கள்?.

விசாரணை அமைப்புகள்

அரசை நடத்தும் முதல்-மந்திரியே ஊழலில் ஈடுபட்டால் இத்தகைய அதிகாரிகள் தைரியமாக ஊழல் செய்து கொள்ளையடிக்கிறார்கள். கர்நாடக மக்கள் இந்த பா.ஜனதா ஊழல் ஆட்சியை தூக்கி எறிய தயாராகிவிட்டனர். தேர்தல் நேரத்தில் இந்த ஆட்சியின் ஊழல்களை பார்த்து கொண்டிருக்கிறோம். ஊழலை ஒழிக்க முதல்-மந்திரியால் முடியவில்லை.

பா.ஜனதா தலைவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்காமல் மத்திய விசாரணை அமைப்புகள் மவுனமாக இருப்பது ஏன்?. ஊழலில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதை கர்நாடக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பா.ஜனதா அரசின் ஊழலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு கே.சி.வேணுகோபால் கூறினார்.


Next Story