என்னை தோற்கடிக்க பா.ஜனதா- ஜனதாதளம் (எஸ்) சதி
வருணா தொகுதியில் என்னை தோற்கடிக்க பா.ஜனதா- ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் சதி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
மைசூரு:-
இதுவே கடைசி தேர்தல்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று நஞ்சன்கூடு தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-
இது தான் எனது கடைசி தேர்தல். இந்த தேர்தலுடன் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். எனக்கு பிறகு யதீந்திரா, தவான் ராகேஷ் அரசியலில் இருப்பார்கள். தவான் ராகேஷ் கல்லூரி படித்து வருகிறார். அவர் படிப்பை முடித்துவிட்டு அரசியலில் ஈடுபடுவார். ராகேஷ் மீது நீங்கள் வைத்திருந்த அன்பை தற்போது அவரது மகன் மீதும் காட்டுகிறீர்கள்.
என்னை தோற்கடிக்க சதி
பா.ஜனதா சார்பில் என்னை எதிர்த்து வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சோமண்ணா, பெங்களூருவை சேர்ந்தவர். அவருக்கும் இந்த மண்ணுக்கும் சம்பந்தம் இல்லை. என்னை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று பா.ஜனதாவும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் உள்ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் பைரதி சங்கர், தலித் வாக்குகளை பிரிக்கும் சக்தியாக தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜனதா- ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் என்னை தோற்கடி சதி செய்து வருகின்றன.
காங்கிரசுக்கு ஆதரவான அலை
பா.ஜனதாவில் மூத்த தலைவர்களை மதிக்கவில்லை. ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி உள்ளிட்டோருக்கு அக்கட்சி டிக்கெட் கொடுக்கவில்லை. தற்போது மாநிலத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. வருணா தொகுதி மக்களை விலைக்கு வாங்க முடியாது என்பது எனக்கு தெரியும்.
இதுவே எனது கடைசி தேர்தல். அதன் பிறகு தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனவே இந்த தேர்தலில் என்னை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சித்தராமையா பேரனும் அரசியலுக்கு வருகிறார்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மகன் தவான் ராகேஷ். 17 வயதான அவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், வருணா தொகுதியில் போட்டியிடும் சித்தராமையா இதுவே எனது கடைசி தேர்தல் என அறிவித்துள்ளார். ஏற்கனவே சித்தராமையா மற்றொரு மகன் யதீந்திரா வருணாவில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதால், பேரன் தவான் ராகேசையும் அரசியலுக்கு அழைத்துவர முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்று வருணா தொகுதியில் வேட்பு மனு தாக்கலின் போது நடந்த பிரசார கூட்டத்தில், சித்தராமையா, மறைந்த தனது மூத்த தலைவர் ராகேசின் மகன் தவான் ராகேசையும் விழா மேடையில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். தவான் ராகேஷ் காங்கிரஸ் துண்டை கழுத்தி அணிந்தபடி கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடி எழுந்து நின்றார். அப்போது கூடியிருந்தவர்கள் விசில் அடித்தும், கோஷம் எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் தனக்கு பிறகு பேரன் தவான் ராகேசும் அரசியலுக்கு வருவார் என சித்தராமையா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.