பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவை வெளியிட்ட பா.ஜனதா நிர்வாகி கைது
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகளை அம்பலப்படுத்திய பா.ஜனதா நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உள்ள ஹாசன் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவரது தந்தை எச்.டி.ரேவண்ணா. இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சிறப்பு புலனாய்வுகுழு(எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கும் முன்பாகவே பிரஜ்வல் ரேவண்ணா தனது மக்கள் பிரதிநிதிக்கான 'டிப்ளோமேடிக்' பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவருக்கு எதிராக 'புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை சர்வதேச அளவில் 'இன்டர்போல்'(Interpol) போலீசார் தேடிவருகிறார்கள்.
இதனிடையே, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த தேவராஜ் கவுடாவை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரில் இருந்து சித்ரதுர்கா சென்ற தேவராஜ் கவுடாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சொத்து ஒன்றை விற்க உதவி செய்வதாக கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக 36-வயது பெண் அளித்த புகாரில் தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணாவை எதிர்த்து தேவராஜ் கவுடா பா.ஜனதா சார்பில் போட்டியிட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை கசிய விட்டதாக தேவராஜ் கவுடா மீதும் குற்றச்சாட்டு உள்ளது.