'திருடன் - போலீஸ்' விளையாட்டின்போது பாஜக தலைவரின் மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் பக்கத்துவீட்டு சிறுவன் உயிரிழப்பு
'திருடன் - போலீஸ்' விளையாட்டின்போது பாஜக தலைவரின் மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் பக்கத்துவீட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் கராரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவர் அம்மாவட்டத்தில் பாஜக கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார்.
இதனிடையே, ஜெய்ஸ்வாலின் மகன் அனந்த் (வயது 10) நேற்று தனது வீட்டின் அருகே உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து 'திருடன் போலீஸ்' விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது, தனது வீட்டில் இருந்த தனது தந்தை ஜெய்ஸ்வாலின் உரிமம் பெற்ற துப்பாக்கியை பொம்மை துப்பாக்கி என நினைத்து அதை அனந்த் எடுத்துவந்துள்ளான். துப்பாக்கிகுண்டுகள் லோட் செய்யப்பட்ட நிலையில் இருந்த அந்த துப்பாக்கியை அனந்த் எடுத்துவந்ததை யாரும் கவனிக்கவில்லை.
அனந்த் தனது பக்கத்து வீட்டு சிறுவனான வேதாந்தா (11) உடன் சேர்ந்து திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத வேதாந்தா மீது பாஜக தலைவரின் மகன் அனந்த் துப்பாக்கியால் சுட்டுள்ளான். பொம்மை துப்பாக்கி என நினைத்து வேதாந்தா மீது அனந்த் சுட்டதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் வேதாந்தாவின் மார்பில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் சிறுவன் வேதாந்தா சுருண்டு விழுந்துள்ளான்.
துப்பாக்கிச்சூடும் சத்தம் கேட்டு அங்கி திரண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.