தவறான வதந்தியை பரப்பியது, பா.ஜ.க.தான் - பீகார் ஆளும்கட்சி குற்றச்சாட்டு


தவறான வதந்தியை பரப்பியது, பா.ஜ.க.தான் - பீகார் ஆளும்கட்சி குற்றச்சாட்டு
x

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான வதந்தியை பரப்பியது பா.ஜ.க.தான் என்று பீகார் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் குற்றம்சாட்டி உள்ளது.

பாட்னா,

தமிழ்நாட்டில் பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர். அவர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகளை சில விஷமிகள் பரப்பினர். திரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் வெளியிட்டனர்.இதனால் பதற்றமான சூழல் உருவானது. பீகார், ஜார்கண்ட் உயர் அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு வந்து, இங்கு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை, பாதுகாப்பாக இருக்கிறார்கள் என கண்டறிந்து சென்றது. வதந்தி பரப்பியவர்கள் மீது தமிழக போலீஸ் முறைப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.

வதந்தியை பரப்பியது பா.ஜ.க.

இந்த விவகாரம் தொடர்பாக பீகார் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசியத்தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக எதுவும் நடைபெறவில்லை.

யார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது, யார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை பாருங்கள்.

வதந்தியைப் பரப்பியது பா.ஜ.க.தான். இது அவர்களது குணம். அரசியல் ஆதாயத்துக்காக இதை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தவறு செய்கிறார்கள். நாட்டு மக்கள் அவர்களை அறிந்து கொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.


Next Story