ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர வலியுறுத்தி பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் போராட்டம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய பேச்சு சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்து விட்டது. இதுபற்றி அவர் பேசிய வீடியோ ஒன்றில், அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, 'ராஷ்டிரபத்தினி' என கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவரது கருத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுமென்றே ஜனாதிபதியை அவமதித்திருப்பதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
இதனால் பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். கைகளில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தி இருந்தனர். இந்த போராட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்.
இது பற்றி நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,
"மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. ஒருபோதும் ஜனாதிபதியை அவமரியாதை செய்ய விரும்பியது இல்லை. ஊடகங்களிடம் பேசும்போது கவனக்குறைவாக ஒரு வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். 'ராஷ்டிரபதி' என்பதற்கு பதிலாக தவறுதலாக நான் 'ராஷ்டிரபத்தினி' என கூறிவிட்டேன். இதற்காக நான் ஜனாதிபதியிடம் நேரில் சென்று விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளேன். அதன் பிறகும் என்னை தூக்கிலிட வேண்டும் என விரும்பினால், செய்யுங்கள். எதற்காக இந்த விஷயத்தில் சோனியா காந்தியை இழுக்கிறீர்கள் என கூறினார்.