பா.ஜ.க. பூஜ்யம் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம்: நிதிஷ் குமாரை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேச்சு
நாட்டின் வளர்ச்சிக்கு ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என மம்தா பானர்ஜியை சந்தித்த பின் நிதிஷ் குமார் பேசியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேரில் இன்று சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு பற்றி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடையே பேசும்போது, நான் நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு வேண்டுகோள் வைத்தேன். பீகாரில் இருந்து ஜெயபிரகாஷ்ஜியின் இயக்கம் தொடங்கியது.
பீகாரில் நாம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், அடுத்து செல்வது பற்றி முடிவு செய்யலாம் என கூறினேன். முதலில், நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு தரவேண்டும். எனக்கு எந்தவித மறுப்பும் இல்லையென்று முன்பே கூட நான் தெரிவித்து இருக்கிறேன்.
பா.ஜ.க. பூஜ்யம் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம். ஊடகங்களின் ஆதரவு மற்றும் பொய்களால் அவர்கள் ஒரு பெரிய கதாநாயகராக உருவாகி இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.
இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதிஷ் குமார் கூறும்போது, இந்த சந்திப்பின்போது, குறிப்பிடும்படியாக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது பற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வருகிறோம்.
அடுத்து என்ன விசயங்கள் செய்யப்பட்டாலும், அது தேச நலனிற்காகவே இருக்கும். தற்போது ஆட்சி செய்து வருபவர்கள், செய்வதற்கு எதுவும் இல்லை. அவர்கள் சொந்த விளம்பரத்திற்கான விசயங்களையே செய்து கொண்டிருக்கின்றனர். தேச வளர்ச்சிக்காக எதுவும் செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை சந்திக்க நிதிஷ் குமார் புறப்பட்டு செல்கிறார்.