பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா இன்று கொல்கத்தா வருகை; பொது கூட்டத்தில் உரை


பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா இன்று கொல்கத்தா வருகை; பொது கூட்டத்தில் உரை
x

பா.ஜ.க. தேசிய தலைவர் பதவி நீட்டிக்கப்பட்ட பின் கொல்கத்தா நகருக்கு இன்று வருகை தந்த ஜே.பி. நட்டா பொது கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


கொல்கத்தா,


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் 9 மாநில சட்டசபை தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு அதற்கு தயாராகும் வகையில், வியூகங்கள், திட்டங்கள் வகுப்பதற்காக டெல்லியில் கடந்த 16-ந்தேதி பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது.

கூட்டத்தில் 35 மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் 12 மாநிலங்களின் முதல்-மந்திரிகள், 37 மாநில பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பெற்ற வரலாற்று வெற்றியை அடுத்து, பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையிலான மெகா பேரணி ஒன்று அவரது தலைமையில் டெல்லி பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரையில் நடந்தது. இதில், பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதன்பின் கூட்டத்தில் அரசியல் தொடர்புடைய பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் 2-வது நாள் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து முடியும் வரை நீட்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதன்படி, நட்டாவின் பதவி காலம் வருகிற 2024 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி முதல் முறைப்படி அக்கட்சியின் தேசிய தலைவராக நட்டா பதவி வகித்து வருகிறார். கட்சி விதியின்படி, 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில், நாளையுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த சூழலில், அவரது பதவி நீட்டிப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறும்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜே.பி. நட்டா தலைமையில் பா.ஜ.க. மிக பெரும் வெற்றியை பெறும். மீண்டும் பிரதமராக மோடி நாட்டை வழிநடத்தி செல்வார் என கூறினார்.

தேசிய தலைவர் பதவி நீட்டிப்பை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கு இன்று வருகை தந்த நட்டா, கட்சி தொண்டர்களை நோக்கி தனது கையை அசைத்து வெற்றிக்கான சைகையை வெளிப்படுத்தினார்.

இதன்பின் நாடியா மாவட்டத்தில் நடக்கும் பொது கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து, இஸ்கான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி கொல்கத்தா நகரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஷாகீத் மினார் மைதானத்தில் சிறப்புரையாற்றுகிறார். இந்த சூழலில் நட்டாவின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.


Next Story