"பான் இந்தியா கட்சி பாஜக தான்" - பிரதமர் மோடி பெருமிதம்
குடும்பத்தால் நடத்தப்படும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பாஜக மட்டுமே பான் இந்திய கட்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில், புதிதாக கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க. மத்திய அலுவலக (விரிவாக்கம்) திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பின்னர் நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், "ஒரு சிறிய அரசியல் அமைப்பில் இருந்து உலகின் மிகப்பெரிய அமைப்பாக பாஜக உயர்ந்ததற்கு கட்சி தொண்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகமே காரணம் என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "தனது போட்டியாளர்களின் குறைகளைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, எல்லா முரண்பாடுகளையும் தைரியமாக மக்களுடன் களத்தில் இறங்கிப் பணியாற்றியதால், நாட்டில் குடும்ப அரசியல் அமைப்புகளுக்கு மத்தியில் பாஜக தான் ஒரே பான் இந்தியா கட்சியாக உருவெடுத்துள்ளது.
1984-ம் ஆண்டில் 2 மக்களவை தொகுதிகளுடன் தொடங்கிய கட்சியின் பயணம் 2019-ம் ஆண்டில் 303 தொகுதிகளாக அதன் வெற்றி அமைந்து உள்ளது. பல மாநிலங்களில், நாங்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறோம்.
கிழக்கில் இருந்து மேற்குவரை, வடக்கிலிருந்து தெற்கு வரை விரிந்துள்ள ஒரே பான் இந்தியா கட்சி பாஜகதான். பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக மட்டுமின்றி, எதிர்காலம் கொண்ட கட்சியாகவும் உருவெடுத்துள்ளது, நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே அதன் ஒரே குறிக்கோள்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.