ஆட்சியை பிடிப்போம் என பிரதமர் மோடி பகல் கனவு- கேரள கட்சிகள் விமர்சனம்


ஆட்சியை பிடிப்போம் என பிரதமர் மோடி பகல் கனவு- கேரள கட்சிகள் விமர்சனம்
x

கேரளாவில் பா.ஜனதா கூட்டணி, ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் மோடி பகல் கனவு காண்கிறார் என்று மார்க்சிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம்லீக் ஆகிய கட்சிகள் கூறியுள்ளன.

திருவனந்தபுரம்,

3 மாநில தேர்தல் முடிவுகளை பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களைப் போல், கேரளாவிலும் சிறுபான்மையினர் ஆதரவு அதிகரித்து வருவதால், வரும் ஆண்டுகளில், அங்கும் பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று கூறியிருந்தார். அதற்கு கேரள அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. ஆளும் கட்சியான மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேலிட குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கூறியதாவது:- பிரதமருக்கும் கனவு காண உரிமை உண்டு. ஆனால், கேரள சட்டசபையில் ஒரே ஒரு இடத்தை பெற்றிருந்த பா.ஜனதா, கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அந்த இடத்தையும் பறிகொடுத்து விட்டது என்பதை பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும். அந்த இடத்தை இடதுசாரி கூட்டணிதான் பறித்தது. கேரளாவில் பா.ஜனதாவின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. எனவே, பிரதமர் சொல்வது பகல் கனவு.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசை சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறியதாவது:-

கேரள மக்கள் மதவாத சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள். பா.ஜனதாவுக்கு இங்கு இடமில்லை. இங்கு ஆட்சியை பிடிப்பது நடக்காது. பாசிச சக்திகளை தடுப்பதில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருக்கிறது.பெரும்பான்மை இந்துக்களும் பா.ஜனதாவுக்கு எதிராக உள்ளனர். இல்லாவிட்டால், பா.ஜனதா முதலாவது அல்லது இரண்டாவது இடத்தில் இருந்திருக்கும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிதான், பா.ஜனதா கால் பதிக்க உழைத்து வருகிறது. கேரள முதல்-மந்திரிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்குகள் இருப்பதால், இருதரப்புக்கும் இடையே கள்ள உறவு நிலவுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மூத்த தலைவர் எம்.ேக.முனீர் கூறியதாவது:-பிரதமர் மோடி கேரளாவின் கள நிலவரத்தை புரிந்து கொள்ளாமல் பகல் கனவு காண்கிறார். 1957-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கூட்டணியோ அல்லது இடதுசாரி கூட்டணியோதான் கேரளாவில் ஆட்சியில் இருந்து வருகின்றன. பலதடவை மதவாத சக்திகள் நுழைய முயற்சித்தும், மக்கள் அனுமதிக்கவில்லை.ஏனென்றால் கேரள மக்கள் படிப்பறிவு மிக்கவர்கள். அனைத்து பெரும்பான்மை, சிறுபான்மை மத அமைப்புகளும், சமூகங்களும் பா.ஜனதாவை கால்பதிக்க விடாமல் தடுக்கும். அவர்கள் பா.ஜனதாவுக்கு ஒரு அங்குல இடம் கூட அளிக்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story