பெங்களூரு முழுஅடைப்புக்கு பா.ஜனதா ஆதரவு-முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேட்டி
பெங்களூருவில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முழு அடைப்புக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மந்திரி சி.டி.ரவி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாங்கள் எதிர்பார்த்தோம்
நீர் விவகாரம், கர்நாடகத்தின் நலன் போன்ற விஷயங்களுக்கு ஆதரவாக பா.ஜனதா நிற்கிறது. பெங்களூருவில் 26-ந் தேதி (நாளை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் நடைபெறும் போராட்டங்களில் பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். பெங்களூருவில் அமைதியை காத்து போராட்டங்களில் பா.ஜனதாவினர் பங்கேற்பார்கள்.
இயல்பை விட 42 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளதாக அரசே கூறியுள்ளது. தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டால் 7 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் காலியாகிவிடும். பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 6 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அரசு திடமான முடிவு எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.
காங்கிரசை ஆதரிப்பார்கள்
அத்தகைய முடிவை எடுத்தால் 7 கோடி கன்னடர்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூறினோம். மேட்டூரில் நீர் இருந்தும், தமிழகம் தண்ணீர் கேட்கிறது. அவ்வாறு இருக்கும்போது கர்நாடக அரசு யோசித்து முடிவு எடுத்து இருக்க வேண்டும் அல்லவா?. தமிழகம் கேட்பதற்கு முன்பே அரசு தண்ணீர் திறந்துவிட்டது. இது சரியா?.
இந்தியா கூட்டணியை காப்பாற்ற கர்நாடக மக்களின் நலனை இந்த அரசு பலி கொடுத்துள்ளது. போதிய அளவில் நீர் இருந்தால் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால் பசுக்களை கொன்று மாட்டிறைச்சியை கொண்டு செல்ல இந்த அரசு அனுமதிக்கிறது. அரசியல் என்றால் வெறும் கணக்கு மட்டுமல்ல. அதன் பின்னணியில் 'கெமிஸ்ட்ரி'யும் உள்ளது.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.