பா.ஜனதா துணை தலைவி தேஜஸ்வினி காங்கிரசில் சேருகிறாரா?


பா.ஜனதா துணை தலைவி தேஜஸ்வினி காங்கிரசில் சேருகிறாரா?
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் மூத்த தலைவர் மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் மனைவியும், கர்நாடக மாநில பா.ஜனதா துணை தலைவியுமான தேஜஸ்வினி காங்கிரசில் சேருகிறாரா என்பது குறித்து அவரே பதில் அளித்துள்ளார்.

மைசூரு:-

தேஜஸ்வினி

கர்நாடக பா.ஜனதா தலைவர்களில் முக்கியமான தலைவராக திகழ்ந்தவர் அனந்தகுமார். பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபையில் மந்திரியாக அங்கம் வகித்திருந்த அனந்தகுமார் திடீரென உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன்பிறகு அவரது மனைவி தேஜஸ்வினி தனது மகளுடன் வசித்து வந்தார். அனந்தகுமார் இறந்தபிறகு அவரது குடும்பத்தினரை பா.ஜனதாவினர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும், அவர்கள் யாருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினி காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் மைசூருவுக்கு சென்ற தேஜஸ்வினி அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனந்தகுமார் கட்டமைத்த கட்சி

நான் பா.ஜனதாவில் தான் இருக்கிறேன். அனந்தகுமார் கட்டிக்காத்து கட்டமைத்த கட்சி பா.ஜனதா. நான் என் இறுதி மூச்சுவரை பா.ஜனதாவில் தான் இருப்பேன். இதை நான் சுயமாக கூறுகிறேன். கட்சியின் துணை தலைவராக செயல்பட்டு வருகிறேன். அனந்தகுமார் எப்போது கட்சியினருடன் தான் இருந்தார். நானும் கட்சியில் முக்கிய பங்காற்றி வருகிறேன். நான் பா.ஜனதா கொள்கைகளில் உறுதியாக இருக்கிறேன்.

அனந்தகுமார் இல்லாமல் பா.ஜனதா சந்தித்த முதல் கர்நாடக சட்டசபை தேர்தல் இதுதான். இதுவரையில் பா.ஜனதாவில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. பொருத்தமான எதிர்க்கட்சி தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார். அதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

காங்கிரசில் சேரும் எண்ணம் இல்லை

நான் காங்கிரசில் சேரப்போவதாக கூறுகிறார்கள். சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் அதுபோல் செய்திகள் வருகின்றன. அந்த செய்திகள் சொல்வது ஒன்றாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நடப்பது வேறு. நான் கட்சியோடு இருக்கிறேன். கட்சியும் என்னோடு இருக்கிறது. எனக்கு காங்கிரசில் சேரும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story