"2024இல் பாஜக துடைத்தெறியப்படும்": உள்துறை மந்திரி அமித் ஷாவின் கருத்துக்கு லாலு பிரசாத் யாதவ் பதிலடி!
பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் மடியில் நிதிஷ் குமார் அமர்ந்திருக்கிறார் என்று மந்திரி அமித்ஷா குற்றம்சாட்டினார்.
பாட்னா,
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக பீகார் மாநிலம் சென்றுள்ளார். அமித் ஷாவின் பயணம் 2024 லோக்சபா தேர்தலுக்கான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் பாஜக ஆட்சியை இழந்த பிறகு அமித்ஷாவின் முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலம் பூர்னியாவில் உள்ள ரங்கபூமி மைதானத்தில் நேற்று பேசிய மந்திரி அமித் ஷா, பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் இருவரையும் கடுமையாக சாடினார்.
"தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் முதுகில் குத்திய நிதிஷ் பாபு, இன்று ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் மடியில் அமர்ந்திருக்கிறார்" என்று மந்திரி அமித் ஷா குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி அளிக்கும் விதத்தில், இன்று டெல்லிக்கு விமானம் ஏறும் முன்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், "கவலைப்பட வேண்டாம், பாஜக துடைத்தெறியப்படும்" என்று ஒரே வார்த்தையில் கூறினார்.
முன்னதாக அமித் ஷாவின் கருத்துக்கு பதிலளித்த லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், "அமித் ஷா கலக்கமடைந்துள்ளார். அவரது அரசு அங்கிருந்து (பீகார்) துடைத்தெறியப்படது. 2024-லும் இதேதான் நடக்கும்.
அதனால் தான், அமித் ஷா அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இதை காட்டு ராஜ்ஜியம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் குஜராத்தில் மந்திரியாக இருந்தபோது என்ன செய்தார்? அவர் குஜராத்தில் இருந்தபோதுகாட்டு ராஜ்ஜியம் தான் இருந்தது" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் அலோசனையில் அவருடன் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாலு பிரசாத் யாதவ் மகனான பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவுடன் நிதிஷ் குமார் அரியானாவில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க உள்ளார். அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா ஏற்பாடு செய்த பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.