எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதா தொண்டர்கள் வாக்குவாதம்
பெங்களூருவில் எடியூரப்பா முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு உண்டானது.
பெங்களூரு:
பெங்களூருவில் எடியூரப்பா முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு உண்டானது.
தொண்டர்கள் வாக்குவாதம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்த பின்பு மூத்த தலைவர்கள், காங்கிரசுடன் சேர்ந்து சமரச அரசியலில் ஈடுபட்டதாக பிரதாப் சிம்ஹா எம்.பி.யும், சி.டி.ரவியும் குற்றச்சாட்டு கூறினார்கள். இந்த விவகாரம் பா.ஜனதா கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட்டில் நேற்று பா.ஜனதா தொண்டர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பேடராயனபுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட தம்மேஷ்கவுடாவும், அவரது ஆதரவாளர்களும் திடீரென்று எழுந்து சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்ட முனீந்திராவை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறினார்கள். முனிராஜ் எம்.எல்.ஏ. பேசிக் கொண்டு இருந்த போது முனீந்திராவை கூட்டத்தில் இருந்து வெளியேற்றும்படி தொடர்ந்து கூறியதால் பா.ஜனதா தொண்டர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது.
சமாதானப்படுத்திய எடியூரப்பா
உடனே மேடையில் அமர்ந்திருந்த எடியூரப்பா எழுந்து வந்து, இந்த கூட்டத்தில் இதுபற்றி பேச வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டார். மேலும் உங்களது பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன். தற்போது கூட்டத்தில் எதுவும் பேச வேண்டாம் என்றும் எடியூரப்பா கூறினார். அதன்பிறகு, தம்மேஷ்கவுடா, அவரது ஆதரவாளர்கள் அமைதியானார்கள். அதன்பிறகு, கூட்டம் முடிந்ததும் சாலையில் வைத்து முன்னாள் துணை முதல்-மநதிரி அஸ்வத் நாராயணை சந்தித்து முனீந்திரா குறித்து தம்மேஷ்கவுடா குற்றச்சாட்டு கூறினார். அப்போது சாலையில் அனைவரும் பார்ப்பதாகவும், பொது வெளியில் இதுகுறித்து பேச வேண்டாம் என்றும், இதுபற்றி விரைவில் பேசி தீர்த்து கொள்வோம் என்றும் அஸ்வத் நாராயண் கூறினார். இந்த சம்பவத்தால் நேற்று பா.ஜனதா கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.