இட ஒதுக்கீடு கட்டமைப்பை மாற்றும் பாஜகவின் நடவடிக்கை அரசியல் அமைப்புக்கு எதிரானது : காங்கிரஸ்
கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஒக்கலிகர்-லிங்காயத் சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மந்திரிசபை கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2பி அந்தஸ்தில் உள்ள மத சிறுபான்மையினருக்கான (முஸ்லிம்) தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதற்கு பதிலாக அந்த சமூகத்தினர் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு(இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. இதனால் முஸ்லிம் மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். 2ஏ அந்தஸ்தில் உள்ள 15 சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
முஸ்லிம்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4 சதவீதம் இடஒதுக்கீடு, லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் என்று பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதலாக தலா 2 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, பாஜக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் அமைப்புக்கு விரோதமானது என்று காங்கிரஸ் சாடியுள்ளது.