கிணற்றில் மிதந்த பெண், 3 குழந்தைகளின் உடல்கள் மீட்பு; கள்ளக்காதலன் கொலை செய்தாரா? போலீசார் விசாரணை
கலபுரகி அருகே கிணற்றில் மிதந்த பெண், 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெண்ணின் கள்ளக்காதலன் கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலபுரகி:
கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா மதனஹிப்பரகா கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா (வயது 32). இவருக்கும் சித்தாப்புரா தாலுகா ரேவூரை சேர்ந்த ரேவப்பா என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் என 3 பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் அம்பிகாவுக்கும், ரேவூரை சேர்ந்த சித்தப்பா என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் அம்பிகாவை அவரது கணவர் ரேவப்பா பிரிந்து சென்று உள்ளார். இதனால் பிள்ளைகளை அழைத்து கொண்டு அம்பிகா தனது சொந்த ஊரான மதனஹிப்பரகா சென்று அங்கு வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கிராமத்தில் உள்ள கிணற்றில் அம்பிகாவும், அவரது 3 பிள்ளைகளும் பிணமாக மிதந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஆலந்தா போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அம்பிகாவையும், 3 பிள்ளைகளையும் கள்ளக்காதலன் சித்தப்பா தான் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டதாக ரேவப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தப்பாவிடம் விசாரித்து வருகின்றனர்.