பஞ்சாயத்து தேர்தலை புறக்கணித்தது மிகப்பெரிய தவறு, இனி அனைத்து தேர்தலிலும் போட்டி - பரூக் அப்துல்லா


பஞ்சாயத்து தேர்தலை புறக்கணித்தது மிகப்பெரிய தவறு, இனி அனைத்து தேர்தலிலும் போட்டி - பரூக் அப்துல்லா
x

Image Courtesy: PTI

2018-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடாமல் தேசிய மாநாட்டு கட்சி புறக்கணித்தது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சி தலைவரான இவர் அக்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பரூக் அப்துல்லா விலகினார்.

ஆனால், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பெரும்பாலான உறுப்பினர்கள் பரூக் அப்துல்லாவே மீண்டும் தலைவராக வேண்டும் என விரும்பினர். இதையடுத்து, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற பின் கட்சியினர் மத்தியில் பரூக் அப்துல்லா பேசியதாவது,

நான் கட்சியினருக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். 2018-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடாமல், புறக்கணித்தது மிகப்பெரிய தவறு. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாம் இனி எந்த தேர்தலையும் புறக்கணிக்கப்போவதில்லை. மாறாக நாம் அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்.

கட்சியின் தலைவராக உமர் அப்துல்லாவிடம் நாம் கூறுவது என்னவென்றால் நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு (பாஜக) எதிராக நாம் போராடவேண்டுமானால், நாம் தேர்தல் களத்தில் குதிக்க வேண்டும்.

பாஜக எதையும் செய்யும், உங்களுக்கு விசுவாசமாக உள்ளவர்களையும் வாங்க முயற்சிக்கும் ஆனால், அவர்களின் திட்டங்களை கடவுள் தோல்வியடைய செய்வார்.

தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். இதில், அரசு, பாதுகாப்பு படையினர் தலையிட்டால் மிகப்பெரிய சூறாவளி வீசும். அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.

எங்கள் உயிரை தியாகம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். கிளர்ச்சியை தொடங்கும் முதல் நபராக பரூக் அப்துல்லா இருப்பேன்' என்றார்.


Next Story