வகுப்பறைகளில் மாணவிகளும் மாணவர்களும் ஒன்றாக உட்கார அனுமதிப்பது ஆபத்தானது: கேரள அரசுக்கு ஐயுஎம்எல் கண்டனம்!


வகுப்பறைகளில் மாணவிகளும் மாணவர்களும் ஒன்றாக உட்கார அனுமதிப்பது ஆபத்தானது: கேரள அரசுக்கு ஐயுஎம்எல் கண்டனம்!
x

இத்தகைய பாலின சமச்சீரான கொள்கை மாணவர்களை தவறாக வழிநடத்தும் என்று கூறினார்.

திருவனந்தபுரம்,

கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) பொதுச் செயலாளர் பொறுப்பு பிஎம்ஏ சலாம் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

"பள்ளி வகுப்பறைகளில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக உட்கார அனுமதிப்பது ஆபத்தானது" என்று அவர் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை கேரளா எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கேரள பள்ளிகளில் சமத்துவச் சீருடை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஆண்களும் பெண்களும் ஒரே பள்ளியில் பயிலலாம், தனித்தனியாக பள்ளிகள் இருக்கக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நல ஆணையம், கேரளத்தில் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனிப் பள்ளிகள் என இருப்பதை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டு, அடுத்த கல்வி ஆண்டு முதல் இரு பாலரும் இணைந்து படிக்கும் பள்ளிகளை மட்டுமே ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மாநில அரசின் பாலின சமச்சீரான கொள்கைகளை சலாம் எதிர்த்து வருகிறார். இத்தகைய பாலின நடுநிலைமை மாணவர்களை தவறாக வழிநடத்தும் என்று கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது:- "இது ஆபத்தானது. வகுப்பறைகளில் பெண்களும் ஆண்களும் ஒன்றாக உட்கார வேண்டிய அவசியம் என்ன? நீங்கள் ஏன் அவர்களை வற்புறுத்துகிறீர்கள் அல்லது அத்தகைய வாய்ப்புகளை உருவாக்குகிறீர்கள்?

அது பிரச்சனைகளை மட்டுமே ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பில் இருந்து விலகுவார்கள். பாலின நடுநிலைமை ஒரு மதப் பிரச்சினை அல்ல, அது ஒரு தார்மீக பிரச்சினை.

பாலின சமச்சீரான சீருடைகளை மாணவர்கள் மீது திணிக்க அரசு முயற்சிக்கிறது.பாலின நடுநிலைமை மாணவர்களை தவறாக வழிநடத்தும். இதை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக்கொள்வோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பாலின-நடுநிலை யோசனைகளை திணிக்கும் நடவடிக்கையில் இருந்து அரசு விலக வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கேட்டுக் கொண்டன. மேலும், இடதுசாரிகள் தலைமையிலான அரசு கல்வி நிறுவனங்களில் தாராளமயக் கொள்கையை அமல்படுத்த முயற்சிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.


Next Story